நவீன்ராஜ் தயாரிப்பில் சந்தானம், தான்யா ஹோப் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கிக்’. கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ராகினி திவிவேதி, கோவை சரளா, தம்பி ராமையா, செந்தில், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அர்ஜுன் ஜான்யா இசையமைத்துள்ள இப்படம் வருகிற செப்-1ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
தான்யா ஹோப் பேசும்போது, “தமிழ் சினிமாவில் எனது முதல் காமெடி படமாக இது உருவாகியுள்ளது. ஆரம்பம் முதல் இறுதி வரை படம் பார்ப்பவர்கள் சிரித்துக் கொண்டே இருப்பார்கள். காமெடி பண்ண வேண்டும் என ஆசை இருக்கிறது. காமெடியாக நடிப்பது கஷ்டமாகவும் இருக்கு.. அந்த வகையில் சந்தானம் ஒரு காமெடி கிங்” என்று கூறினார்.
இயக்குநர் பிரசாந்த் ராஜ் பேசும்போது, “2009ல் நான் முதலில் இயக்கிய ‘லவ் குரு’ படத்தின் இசைப் பணிகளுக்காக ஏ.ஆர் ரகுமான் ஸ்டுடியோவில் அமர்ந்திருந்தபோது அங்கு வந்து செல்லும் தமிழ் பிரபலங்களை பார்த்தேன். அப்போதிருந்தே தமிழில் படம் இயக்கும் வாய்ப்பு எனக்கு எப்போது கிடைக்கும் என காத்திருக்க ஆரம்பித்தேன். கோவிட் காலகட்டத்தில் கிடைத்த அந்த ரெண்டு வருடத்தை சரியாக பயன்படுத்தி ஸ்கிரிப்ட் தயார் செய்து அதில் சந்தானம் தான் நடிக்க வேண்டும் என முடிவு செய்தேன். அவரை சந்தித்து பேச சில முறை முயற்சித்தும் சரியாக அமையாததால் அதிரடியாக பாண்டிச்சேரிக்கு சென்று திடீரென அவரை சந்தித்து கதையை கூறி சம்மதம் பெற்றேன்.
சென்னையில் ஆரம்பித்து பாங்காங்கில் வரை ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடைபெற்றது. இடையில் நடைபெற்ற தனது அப்பாவின் சடங்குகளுக்கு கூட சென்னை வராமல் அங்கேயே அவற்றை செய்து முடித்தார் சந்தானம். படம் துவங்குவதற்கு முன்பே அவர் போட்ட கண்டிஷன்களில் ஒன்று இரவு நேர படப்பிடிப்பு வேண்டாம் என்பது தான். ஆனால் படப்பிடிப்பு துவங்கிய முதல் நான்கு நாட்கள் இரவு நேரத்தில் அதுவும் சண்டை காட்சிகள் தான் படமாக்கப்பட்டன" என்றார்.