சென்னை தேனாம்பேட்டையில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மொத்தம் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் சில தீர்மானங்கள் பின்வருமாறு...
ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் ஆண்டுக்கு 2 படங்கள் நடிக்க வேண்டும். பின்பு எந்த ஒரு படமாக இருந்தாலும் திரையரங்குகளில் வெளியான 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடி தளத்துக்கு கொடுக்க வேண்டும். அதற்கான விளம்பரங்களை 4 வாரங்களுக்குப் பிறகுதான் வெளியிட வேண்டும். புதிய திரைப்படங்களுக்கு அதிகபட்சமாக 60%தான் பங்குத் தொகையாக கேட்க வேண்டும். திரையரங்குகளில் திரையிட தயாரிக்கப்பட்ட படங்களை ஓடிடியில் திரையிடும்போது அதில் வரும் வருமானத்தில் ஒரு பங்கு திரையரங்குகளுக்கு அளிக்க வேண்டும். இந்த தீர்மானங்கள் அனைத்தும் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கவுள்ளார்கள்.
இதே போல் தமிழக அரசிடம் சில கோரிக்கை வைக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை, திரையரங்குகளுக்கு பராமரிப்பு கட்டணம் மற்ற மாநிலத்தில் உள்ளது போல வசூலிக்க அனுமதிக்க வேண்டும். திரையரங்குகள் வர்த்தக சம்பந்தமான நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும். மின்சாரக் கட்டணங்கள், சொத்து வரி, ஆகியவற்றை திரையரங்குகளுக்கு குறைத்து வசூலிக்க ஆவண செய்ய வேண்டும் என்பவை ஆகும்.