Skip to main content

தயாரிப்பாளர் சங்க தேர்தல் வழக்கு - அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

Published on 04/04/2023 | Edited on 04/04/2023

 

tamil film producer council election case update

 

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தற்போது 'தேனாண்டாள் ஸ்டுடியோஸ்' முரளி ராமசாமி தலைமையில் இயங்கி வருகிறது. இந்த சங்கத்திற்கான தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்து வரும் நிலையில், தற்போது 2023 - 2026 ஆம் ஆண்டுக்கான தேர்தல் வரும் 26.3.2023 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

 

இதையடுத்து தயாரிப்பாளர் கவுன்சிலின் உறுப்பினர்கள் கமல்குமார், சீனிவாசன் உள்பட எட்டு தயாரிப்பாளர்கள் இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில், மார்ச் 26 ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலை ரத்து செய்யக் கோரியும் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியை தேர்தல் அதிகாரியாக நியமித்து தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் கவுன்சில் நிர்வாகிகள் தேர்தலுக்கான அதிகாரிகளாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் கே.வெங்கட்ராமன் மற்றும் வி.பாரதிதாசன் ஆகியோரை நியமித்து உத்தரவிட்டது நீதிமன்றம். 

 

பின்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் ஏப்ரல் 30 ஆம் தேதி நடக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதில் தயாரிப்பாளர் முரளி ராமசாமி தலைமையில் ஒரு அணியும் மன்னன் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கானது நீதிபதி கே.குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் கவுன்சில் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘நிர்வாகிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 30 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது என்றும் வாக்கு எண்ணிக்கை மே 1 ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும்’ தெரிவித்தார். பின்பு மனுதாரர்கள் தரப்பில், ‘தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்க அனைத்து நடைமுறைகளையும் வீடியோவாக பதிவு செய்ய வேண்டும்’ என்றார். மேலும் வாக்கு எண்ணிக்கை தேர்தல் நடைபெறும் அதே நாளில் நடத்த வேண்டும் என்றும் அந்த நாளன்று தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் எனவும் மெமோ தாக்கல் செய்யப்பட்டது. 

 

இதனைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர்கள் தங்கள் கோரிக்கைகளை தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் தெரிவித்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என உத்தரவிட்டார். மேலும் தேர்தல் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வருகிற ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

 

 

சார்ந்த செய்திகள்