அமெரிக்காவில் கள்ள நோட்டுப் புழக்கம் தொடர்பான விசாரணையின்போது கருப்பினத்தைச் சார்ந்த ஜார்ஜ் ப்ளாய்ட் என்னும் நபர் போலீஸாரால் கழுத்து நெருக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் கருப்பினத்தவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கு முடிவு காண வலியுறுத்தி அமெரிக்கா முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. அதேபோல் கேரளா மாநிலத்தில் காட்டு யானை ஒன்றுக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பட்டாசு வைக்கப்பட்ட அன்னாசிப்பழத்தைக் கொடுத்துள்ளனர். இதைச் சாப்பிட்ட கர்ப்பமான யானையின் வாய்ப் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்ட காரணத்தால் உயிரிழந்தது. இந்தச் சம்பவம் விலங்கு நல ஆர்வலர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு சம்பவத்திற்கும் உலகம் முழுவதும் பலரும் கடும் கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில் இந்தச் சம்பவங்கள் குறித்து நடிகை தமன்னா கருத்து தெரிவித்துள்ளார். அதில்...
''உங்கள் அமைதி உங்களைப் பாதுகாக்காது. ஒவ்வொரு உயிரும் முக்கியமல்லவா? அது மனிதனாக இருந்தாலும் சரி, விலங்காக இருந்தாலும் சரி. எந்தவொரு படைப்பையும் அழிப்பது உலகளாவிய சட்டத்திற்கு எதிரானது. நாம் மீண்டும் மனிதனாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். இரக்கத்தை வெளிப்படுத்தி அன்பைக் கடைப்பிடிக்க வேண்டும். எல்லா உயிரும் முக்கியம். உலகமே விழித்திடு'' எனக் கூறியுள்ளார்.