பல்வேறு பொதுநல வழக்குகள் மூலம் பல விஷயங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து தீர்வு கண்ட சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி, வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வயது 87. அங்கு சிகிச்சை பெற்றுவந்த டிராஃபிக் ராமசாமியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக நேற்று (04.05.2021) தகவல் வெளியான நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு சமூக ஊடகங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்ற நிலையில், இயக்குநர் டி. ராஜேந்தர் மறைந்த டிராஃபிக் ராமசாமிக்கு இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்...
"சமூக ஆர்வலரும், பொது நல சேவகரும் எனது நீண்டகால நண்பருமான திரு டிராபிக் ராமசாமி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். நமது சமூகத்திற்கு அவரது மறைவு ஒரு பெரிய இழப்பு. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலை கூறிக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" என கூறியுள்ளார்.