கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கு ஊடகங்கள் ஆதரவு தர வேண்டும் எனக் கோரி அவரது தந்தை டி.ராஜேந்தர் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தக் காணொளியில், “கௌதம் மேனன் இயக்கத்தில், ஐசரி கணேஷ் தயாரிப்பில் என்னுடைய மகன் சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படம் நாளை வெளியாகவுள்ளது. எல்லாம் வல்ல இறைவனது அருளாலும் ரசிகர்களின் ஆதரவாலும் படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன். இந்தப் படத்திற்கு ஊடகங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும். மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் நான் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் உங்கள் அனைவரையும் தலைப்புச் செய்தியோடும், இனிப்புச் செய்தியோடும் சந்திக்கிறேன்.
இயக்குநர் கௌதம் மேனன் அந்தக் காலத்திலிருந்து நிறைய நல்ல படங்களை கொடுத்துவருகிறார். குறிப்பாக சிம்புவுடனான கூட்டணியில் அவர் இயக்கி வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்கள் மிகப்பெரிய வெற்றிபெற்றன. அந்த வரிசையில் வெந்து தணிந்தது காடு படமும் இடம்பெற வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
படம் ரொம்பவும் வித்தியாசமாக வந்திருக்கிறது. வைரக்கல்லை தங்கத்தட்டில்தான் வைக்க வேண்டும் என்பார்கள். அந்த வகையில், அற்புதமான இந்தப் படத்தை உருவாக்கி ரெட் ஜெயண்ட் நிறுவனத்திடம் கொடுத்திருக்கிறார்கள். ரஜினிக்கு ராசி ஏ.வி.எம்., சிம்புவுக்கு ராசி - ஜி.வி.எம். அதனால்தான் இந்தப் படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
என் மகனை கஷ்டப்பட்டு நடிக்க வைத்தேன். அவன் எந்த விருது, பாராட்டு வாங்கியபோதும் அதை நான் பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை. ஆனால், இந்தப் படத்தில் சிம்புவின் நடிப்பை எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளரான ஜெயமோகன் பாராட்டியது மகிழ்ச்சியைத் தந்தது. அந்தத் தருணத்தில் என்னுடைய மகனைப் பெற்றதை நினைத்து நான் ரொம்பவும் சந்தோஷப்பட்டேன். ஒரு மனிதன் வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டுமென்றால் ஜாதகம் கைகொடுக்க வேண்டும். ஒரு கலைஞன் வெற்றிபெற வேண்டுமென்றால் ஊடகம் கைகொடுக்க வேண்டும். நீங்கள் ஆதரவு கொடுத்தால் வெந்து தணிந்தது காடு படம் நிச்சயம் சிம்புவின் வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக அமையும்” எனப் பேசியுள்ளார்.