
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த மாதம் 21ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான படம் ‘டிராகன்’. ஏ.ஜி.எஸ். தயாரித்திருந்த இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கே.எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தற்போது வரை திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. வசூலிலும் உலகம் முழுவதும் 10 நாட்களில் ரூ.100 கோடியை கடந்து பலரையும் ஆச்சரியப்படுத்தியது. படக்குழுவினரை ரஜினி சமீபத்தில் நேரில் அழைத்து பாராட்டியிருந்தார். பின்பு படக்குழு படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடியது.
இப்படம் மூலம் பல்லவி கதாபாத்திரத்தில் நடித்த அறிமுக நடிகை கயாடு லோஹர் ரசிகர்களின் வரவேற்பை வெகுவாக பெற்றார். அவரது பழைய வீடியோக்கள் மற்றும் ஃபோட்டோக்களை எடிட் செய்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவரை கொண்டாடி வந்தனர். இதற்காக தமிழில் பேசி நன்றி தெரிவித்து ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார் கயாடு லோஹர். இந்த நிலையில் தற்போது அஷ்வத் மாரிமுத்துவுக்கும் பிரதீப் ரங்கநாதனுக்கும் நன்றி தெரிவித்து தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் பகிர்ந்திருப்பதாவது, “அஷ்வத் மாரிமுத்து கீர்த்தி கதாபாத்திரத்திற்காக ஜூம் காலில் என்னிடம் கதை சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. அந்த கதாபாத்திரத்தில் எனது நடிப்பு திறமையைக் காண்பிக்க ஆர்வமாக இருந்தேன். ஆனால் அவரிடம் இருந்து பின்பு எந்த அழைப்பும் வரவில்லை. இந்த பட வாய்ப்பை இழந்ததுவிட்டதாக உணர்ந்தேன்.
பிறகு ஒரு மாதம் கழித்து அஷ்வத் என்னை அழைத்தார். ஆனால் இந்த முறை பல்லவி கதாபாத்திரத்திற்காகக் கதை சொன்னார். சொல்லி முடித்த பிறகு இவர் ஏன் கீர்த்தி கதாபாத்திரத்தை விட்டுவிட்டு பல்லவி கதாபாத்திரத்திற்கு அழைக்கிறார் எனச் சற்று குழப்பமடைந்தேன். 5 நிமிஷம் கழித்து அவரே திரும்ப அழைத்து ஒரு விஷயம் சொன்னார். அதை இன்றுவரை நான் நினைவில் வைத்திருக்கிறேன். கயாடு, இரண்டு ஹூரோயின்கள் இருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். டிராகன் படமும் பல்லவி கதாபாத்திரமும் உன் வாழ்க்கையை மாற்றும். கீர்த்தியை விட பல்லவி கதாபாத்திரத்திற்குத் தான் அதிக முக்கியத்துவம் உள்ளது. உன்னை மக்கள் விரும்பும் படி பல்லவி கதாபாத்திரத்தில் காண்பிப்பதாக உறுதியளிக்கிறேன்’ என்றார். இறுதியில் அவர் சொன்னது போலவே செய்தார். அஷ்வத் மாரிமுத்து படங்களில் பெண்கள் கதாபாத்திரத்துக்கு எப்போதும் முக்கியதும் கொடுத்து எழுதப்பட்டிருக்கும். அதில் ஒரு கதாபாத்திரத்தை அவர் எனக்கு கொடுத்தார். இரண்டு முறை கதை கேட்ட பிறகு கதையையும் பல்லவி கதாபாத்திரத்தையும் புரிந்து கொண்டு இந்தப் படத்தில் ஒரு பகுதியாக இருப்பதைத் தவறவிட விரும்பவில்லை. நான் எப்போதும் உங்களுக்கு நன்றியுள்ளவராக இருப்பேன்" என்றுள்ளார்.
மேலும், “உங்களுக்கு சிறப்பாக நடக்க தங்களால் முடிந்த முயற்சிகளை எடுக்கும் ஒரு உண்மையான நண்பரை சக நடிகர்களில் காண்பது அரிது. அப்படி இருப்பவர்தான் பிரதீப் ரங்கநாதன். எந்த ஒரு தன்னலமும் இல்லாமல் நீங்கள் கற்றுக்கொண்ட அனுபவங்களையும் பாடங்களையும் எனக்குச் சொல்லிக் கொடுத்தீர்கள். அது எப்போதும் என் நினைவில் இருக்கும். படப்பிடிப்பு தளத்தில் நாம் பேசாமல் இருந்தது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால் இப்போது சினிமா தொடர்பாக நிறைய பேசுகிறோம். நீங்கள் ஒரு திறமையானவர் மற்றும் அற்புதமான நடிகர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.