இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு ‘மாநாடு’ படத்தில் நடித்துள்ளார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பல பிரச்சனைகளைத் தாண்டி கடந்த 25ஆம் தேதி திரையரங்கில் வெளியான இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.
இந்நிலையில் நடிகர் சிம்புவின் தந்தை டி ராஜேந்தர் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் பைனான்சியர் உத்தம் சந்த் ஆகியோர் மீது சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த புகார் மனுவில்," மாநாடு படம் வெளியாகும் முதல் நாள் சாட்டிலைட் உரிமம் விற்கப்படாததால் படம் வெளியாவதில் சிக்கல் எழுந்தது. இதனையடுத்து படத்தின் சாட்டிலைட் உரிமம் 5 கோடிக்கு குறைவாக விற்றால் அதற்கான தொகைக்கு தான் பொறுப்பேற்றுக் கொள்வதாக பைனான்சியர் உத்தம் சந்துக்கும் எங்களுக்கும் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் மாநாடு திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பொழுது படத்தின் சாட்டிலைட் உரிமையை எங்களிடம் தெரிவிக்காமலேயே பைனான்சியர் உத்தம்சந்த் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இருவரும் தனியார் தொலைக்காட்சிக்கு விற்றுள்ளதாக "கூறியுள்ளார்.
இவ்வழக்கை விசாரித்த சென்னை உரிமையியல் நீதிமன்றம் பைனான்சியர் உத்தம் சந்த் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.