அண்ணன் சூர்யா தயாரிப்பில் தம்பி கார்த்தி நடிக்கும் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் இப்படத்தின் இயக்குனர் பாண்டிராஜ், நடிகர் சிவகுமார், சத்யராஜ், சூர்யா, கார்த்தி, சாயீஷா, சூரி, மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அப்போது நடிகர் கார்த்தி விழாவில் பேசுகையில்....
"கடைக்குட்டி சிங்கம் படத்தின் படப்பிடிப்பு அதிகாலை ஆறு மணிக்கு ஆரம்பித்தால் இரவு தாமதமாக தான் முடியும். இயக்குநர் பாண்டிராஜ் எல்லாவற்றையும் ப்ளான் பண்ணி தான் சரியாக செய்து முடித்தார். அவர் இந்த படத்துக்காக 28 கதாபாத்திரங்களை உருவாக்கியுள்ளார். ஒவ்வொன்றும் தனித்துவமாக இருப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. பட்டினத்தில் வேலை செய்யும் எல்லோரையும் கிராமத்துக்கு வந்து விவசாயம் செய்ய வைக்கும் ஒரு படமாக கடைக்குட்டி சிங்கம் இருக்கும். நான் முதன் முறையாக இசையமைப்பாளர் இமான் இசையில் நடிக்கிறேன். இப்படத்தில் நல்ல பாடல்கள் உள்ளது. நான் அண்ணன் சூர்யா தயாரிப்பில் நடிப்பேன் என்று நினைத்து கூட பார்த்தது இல்லை. இப்படத்தை அவர் தயாரித்துள்ளார். அவர் தயாரிப்பில் நடித்தது மகிழ்ச்சி. முதன் முறையாக நாங்கள் இணைந்து பணியாற்றியுள்ளோம். சின்ன வயதிலிருந்து எனக்கு அக்கா என்றால் மிகவும் பிடிக்கும். அக்கா தான் நாம் என்ன கேட்டாலும் கொடுப்பார். நாம் வேலை முடிந்து சோர்வாக வீட்டுக்கு வந்தால் நமக்கு காபி போட்டு கொடுப்பார். ஆனால் அண்ணனிடம் அதை எதிர்பார்க்க முடியாது அடிதான் கிடைக்கும்" என்றார்.
இதை தொடர்ந்து சூர்யா பேசுகையில்.... "கடைக்குட்டி சிங்கம் படத்தில் கிளிசரின் போடாமல் அழுது பல நடிகர்கள் அர்ப்பணிப்போடு நடித்துள்ளனர். ஒருவருக்கு படத்தின் மீதும் அதீத ஈர்ப்பு இருந்தால் மட்டும் தான் இதை போல் சிறப்பாக நடிக்க முடியும். விரைவில் நாங்கள் இருவரும் இணைந்து நடிப்போம் எப்போதும் ஒரு விஷயத்துக்காக நாம் உண்மையாக உழைத்தால் அது கண்டிப்பாக நமக்கு பலனை தரும். அப்படி உண்மையாக உருவான இயக்குநர் பாண்டிராஜின் கதையால் இப்படம் இவ்வளவு நடிகர் பட்டாளத்தோடு சிறப்பாக அமைந்துள்ளது. சத்யராஜ் மாமா நாங்கள் குழந்தையாக இருக்கும் போது அவர் வாங்கிய முதல் சம்பளம் 10 ரூபாயில் 3 ரூபாய் எடுத்து அதில் எனக்கும் கார்த்திக்கும் சாப்பிட இனிப்பு வகைகளை வாங்கி தந்தார். இப்போது சத்யராஜ் மாமா நடிக்கும் கார்த்தியுடன் நடிக்கும் படத்தை நாங்கள் தயாரித்து அவருக்கு சம்பளம் கொடுத்துள்ளோம். இது எங்களுக்கு வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பரிசு" என்றார்.