சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' படம், இந்த அக்டோபர் 30ஆம் தேதி அமேசான் ஓ.டி.டி தளத்தில் வெளியிடுவதாக இருந்தது. சில காரணங்களால் அது தள்ளிப்போகிறது. இதுகுறித்து நடிகர் சூர்யா சமூகவலைதளத்தில் விளக்கமளித்தார்.
அதில், "இது வழக்கமாக நாம் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு கடிதம் அல்ல. சில நேரம் எனது சூழல் இதற்கு முன் சந்தித்திராத வகையில் அமையும். இப்போது நான் மனந்திறந்த நிலையில் வெளிப்படையாக உங்கள் முன் நிற்கிறேன். பேச விரும்புகிறேன். ஏனென்றால் நீங்கள் தான் என்னை இந்த இடத்திற்குக் கொண்டு வந்து நிற்க வைத்திருக்கிறீர்கள் எல்லா வகையிலும். உங்களது பிரதிபலன் பாராத அன்பும், பாராட்டும், உண்மையும்தான் இந்தத் தகுதியை எனக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறது. 'சூரரைப் போற்று' படம் தொடங்கியபோதே, இது ஒரு சவாலான முயற்சி என்று அதை எதிர்கொள்வதில் மகிழ்ச்சியாக நாங்கள் உணர்ந்தோம்.
இதற்கான படப்பிடிப்புத் தளங்கள் இதுவரை காணாதவை. பணிபுரிந்த புதிய புதிய படப்பிடிப்பு இடங்கள், சந்தித்த மனிதர்கள், சந்தித்த வெவ்வேறு மொழியினர், பணியாற்றிய திறமைசாலிகள் என அனைத்தும் மறக்க முடியாதவை. அவை வித்தியாசமானவை மட்டுமல்ல குறிப்பிடத்தக்கதாகவும் இருந்தவை. 'மாறா' என்ற அந்த உலகத்தில் கொண்டு சேர்க்கும் விதமாக இருந்த அந்தப் பிரம்மாண்ட அனுபவத்தை வார்த்தைகளால் விளக்கிவிட முடியாது.
படத்தில் விமானப்படை சார்ந்த காட்சிகள் வருவது உங்கள் அனைவருக்கும் தெரியும். அதனால் அது சம்பந்தமாக ஏராளமான நடைமுறைகளும் அனுமதிகளும் பெறவேண்டியிருந்தது. இப்படம் தேசிய பாதுகாப்பு பற்றி பேசுவதால் அது சம்பந்தமாக இந்திய விமானப்படையுடன் நாங்கள் தொடர்புகொண்டு, அவர்களது ஒத்துழைப்பையும் பெற வேண்டி இருந்தது. படம் வெளியிடுவதற்கு முன் அவர்களிடம் தடையின்மை சான்றிதழ் பெற வேண்டி இருப்பதால் பட வெளியீடு சற்றுத் தாமதம் ஆகிறது.
இது வழக்கமான நடைமுறைதான். வேறொன்றுமில்லை. கவலை வேண்டாம். 'சூரரைப் போற்று' படம் என் இதயத்திற்கு நெருக்கமான படம். தனிப்பட்ட முறையில் என்னை மிகவும் பாதித்த கதை இது. துரதிருஷ்டவசமாகச் சிறு தாமதம் ஆகிறது. படம் தாமதம் என்பது எனக்கும் சிறு வலியை ஏற்படுத்தும் விஷயம்தான். ஏனென்றால் அவ்வளவு எதிர்பார்ப்புடன் நீங்கள் இருக்கிறீர்கள். இந்தத் தாமதம் எதிர்பார்ப்பைக் கூட்டும் ஒரு அம்சமாக நாம் நேர்நிலையாக எடுத்துக் கொள்வோம். இந்தச் சின்ன இடைவெளியை 'மாறா'வின் உலகத்தில் நீங்கள் பிரவேசிக்க ஒரு முன்தயாரிப்பு நேரமாக எடுத்துக் கொள்ளலாம். இப்படி பாசிட்டிவாக எடுத்துக் கொள்வோம். விரைவில் ஒரு சிறப்பு முன்னோட்டத்தை வெளியிட இருக்கிறோம். இத்துடன் ஒரு அழகான நட்பைப் பற்றிய பாடலை வெளியிடுகிறோம். அது நம் நட்புக்கான அர்ப்பணிப்பாகவும் அன்பின் அடையாளமாகவும் இருக்கும்" எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், தற்போது 'சூரரைப் போற்று' படத்திற்குத் தடையில்லாச் சான்றிதழ் கிடைத்துவிட்டது. இதனால் உற்சாகமாக படத்தின் வெளியீட்டுப் பணிகளைத் தொடங்கிவிட்டது படக்குழு. ட்ரெய்லர் வெளியீடு, இதர பாடல்கள் வெளியீடு குறித்த திட்டமிடல்கள் நடைபெற்று வருகின்றன.
தீபாவளி வெளியீடாக 'சூரரைப் போற்று' படம் இருக்கட்டும் என அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் பெரும் உற்சாகமாகியுள்ளனர்.