ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக் கோரி கடந்த 2014 ஆம் ஆண்டு பீட்டா அமைப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரத் தடை விதித்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இதன்பின்பு ஜல்லிக்கட்டு நடத்தப்படாத நிலையில் 2017 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நீக்கக் கோரி மாபெரும் போராட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. இதன் விளைவாகத் தமிழக அரசு அவசரச் சட்டம் நிறைவேற்றியது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலைத் தொடர்ந்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி வழக்கம் போல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே பீட்டா உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்புகள் சார்பில் தமிழக அரசு இயற்றிய அவசரச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க மறுத்தது. மேலும் ‘தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த ஆவணங்கள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்த பகுதி என்பதை ஏற்றுக் கொள்கிறோம்’ என்று கூறியுள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை இல்லை என உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு தமிழக மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதனை பட்டாசு வெடித்து தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை பலரும் நினைவு கூர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், "6 ஆண்டுகளுக்கு முன் நம்மவர்களின் அகிம்சை வழி வீர தீர சூரத்தை சாட்சியாய் கண்டேன். தமிழர் ஒற்றுமை வென்றது" என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து கமல்ஹாசன், "தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஏறு தழுவுதலை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஏற்றுக் கொண்டது மிகுந்த மகிழ்ச்சி. இந்தத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழரின் கலாச்சாரத்துக்குக் கிடைத்த சட்டப்பூர்வ அங்கீகாரம்" எனப் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜல்லிக்கட்டு தமிழ் கலாச்சாரத்துக்கும் கம்பலா கன்னட கலாச்சாரத்துக்கும் ஒருங்கிணைந்தது என்பதை உணர்த்தும் படி, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. மாநில அரசுக்கு வாழ்த்துக்கள். ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் தலை வணங்குகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். 'கங்குவா' படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்ததாக ஜல்லிக்கட்டை மையப்படுத்தி வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Happy and proud to note the Hon’ble Supreme Court’s ruling, upholding #Jallikattu that’s integral to our Tamil culture & #Kambala to Kannada culture!
Hearty congratulations to both State Governments and respect to all those who fought consistently against the ban.…— Suriya Sivakumar (@Suriya_offl) May 19, 2023