Skip to main content

"இந்தக் கதாபாத்திரம் என் வாழ்வில் ஓர் மைல்கல்" - சூர்யா நெகிழ்ச்சி

Published on 02/11/2022 | Edited on 02/11/2022

 

suriya tweet about 1 year of jai bhim

 

இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘ஜெய் பீம்’. இப்படத்தில் சந்துரு என்கிற வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் பொருத்தமாக நடித்திருந்தார் சூர்யா. மேலும் மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ், பிரகாஷ்ராஜ், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் சிறப்பாகத் தங்களது கதாபாத்திரங்களில் நேர்த்தியான நடிப்பினை கொடுத்திருந்தார்கள். இசைப் பணிகளை ஷான் ரோல்டன் மேற்கொண்டிருந்தார்.

 

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியான இப்படம் குறிப்பிட்ட சமூகத்தைத் தவறாகச் சித்தரித்துள்ளதாக சில எதிர்ப்புகளையும் எதிர்கொண்டது. இருப்பினும் படத்தைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மேலும் பல்வேறு சர்வதேசத் திரைப்பட விழாவில் போட்டியிட்டுப் பல விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது. இது போக சில மாதங்களுக்கு முன்பு சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தைத் திரையரங்கில் படக்குழுவினர் வெளியிட்டார்கள். 

 

இந்நிலையில் ‘ஜெய் பீம்’ படம் வெளியாகி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதற்கு ரசிகர்கள் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனைக் கொண்டாடும் விதமாகப் படக்குழு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். அதில் இயக்குநர் ஞானவேல், படத்தில் பணியாற்றிய அனுபவங்கள் மற்றும் அவரது சமூக கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். 

 

இது தொடர்பாக சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜெய் பீம் படம் ஒரு வருடத்தைக் கடந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. எழுத்து வடிவத்திலிருந்து திரை வடிவத்திற்குக் கொண்டு வரும் வரை இப்படம் வலுப்பெற்றுக் கொண்டேயிருந்தது. என் சகோதரர் ஞானவேலுக்கு நன்றி. மேலும் இந்த அர்த்தமுள்ள படத்தைக் கொடுத்த படக்குழுவினருக்கு நன்றி. வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரம் என் வாழ்வில் ஓர் மைல்கல்" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்