கேரளாவில் தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த கனமழை காரணமாக வயநாடு மாவட்டத்திலுள்ள முண்டக்கை என்ற இடத்தில் கடந்த ( 30.07.2024) நள்ளிரவு 1 மணிக்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து அங்கிருந்து சுமார் 2 கி.மீ தொலைவிலுள்ள சூரல்மலை என்ற இடத்திலும் அதிகாலை 4 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இவ்விரு இடங்களிலும் தொடர்ச்சியாக மீட்பு பணிக்குழு பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த இரு நிலச்சரிவுகளில் தற்போது வரை 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நிலச்சரிவில் சிக்கி 216 பேரைக் காணவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு பல அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் ஆகியோர் தங்களது இரங்களை தெரிவித்து வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து மலையாள சினிமா நட்சத்திரங்கள் பலரும் தங்களது சோசியல் மீடியா பக்கத்தில் எந்தெந்த பகுதியில் மீட்பு பணிக்குழு அமைத்த கூடாரங்கள் உள்ளது என்றும் நிவாரணப் பொருட்கள் எந்தெந்த பகுதியில் தருகிறார் என்றும் தொடர்ந்து ஆன்லைனில் அப்டேட் செய்தும் வருகின்றனர். சிலர் சம்பவம் நடந்த இடத்திற்கே சென்று உதவி வருகின்றனர். நடிகை நிகிலா விமல் டி.ஒய்.எஃப்.ஐ என்ற அமைப்புடன் இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி பலரின் பாரட்டுகளைப் பெற்றது.
இதையடுத்து அம்மாநில பொது நிவாரண நிதிக்கு விக்ரம் ரூ.20 லட்சம் வழங்கினார். இந்நிலையில் சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் இந்த பேரிடரில் ஏற்பட்ட துயரம் குறித்து “என்னுடைய எண்ணங்களும் பிராத்தனைகளும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பற்றிதான் உள்ளது. மனம் உடைந்து போனேன்..., மீட்பு பணியில் ஈடுபட்டுவரும் அதிகாரிகளையும் பொது மக்களையும் நான் மதிக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து சூர்யா, ஜோதிகா, கார்த்தி ஆகியோர் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், ரூ 50 லட்சம் நிதி வழங்கியுள்ளனர்.