Skip to main content

"காயமடைந்தவர்களை விரைவாக மீட்க எனது பிரார்த்தனைகள்" - சூர்யா இரங்கல்!

Published on 11/08/2020 | Edited on 11/08/2020
szdvz

 

'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் துபாயில் சிக்கியிருந்த இந்தியர்களைத் தாயகம் அழைத்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்  தினங்களுக்கு முன்பு இரவு 8.15 மணிக்கு கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டது. அப்போது, ஓடுதளத்தின் அருகே கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் திடீர் விபத்துக்குள்ளானது. இந்த கோரவிபத்திற்குள்ளான விமானம் இரண்டு துண்டுகளாக உடைந்தது. இந்த விமானத்தில் 10 குழந்தைகள் உட்பட சுமார் 180 பயணிகளும், விமான ஊழியர்களும் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தை சேர்ந்த மூன்று பேர் பயணித்துள்ளனர். இதுவரை ஒரு குழந்தை உள்பட 20 பேர் உயிரிழந்திருப்பதாக கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த விபத்து குறித்து பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் சூர்யா இச்சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்...

 

"துக்கமடைந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்... காயமடைந்தவர்களை விரைவாக மீட்க எனது பிராத்தனைகள்! மலப்புரம் மக்களுக்கு எனது வணக்கங்கள் & விமானிகளுக்கு எனது மரியாதையை தெரிவித்துக்கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சொந்த மக்கள் மீது நடத்தி வரும் வன்முறை” - சூர்யா கடும் கண்டனம்

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
Suriya strongly condemns the government in the Kallakurichi illicit liquor

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கள்ளச்சாராய மரணத்திற்கு பலரும் அரசுக்கு எதிராக கண்டனங்களையும் கருத்துகளையும் தெரித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சூர்ய தனது சமூக வலைதள பக்கத்தில் இனி ஒரு விதி செய்வோம்...! அதை எந்நாளும் காப்போம்...! என்று பதிவிட்டுள்ளார். அத்துடன் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு சிறிய ஊரில் 50 மரணங்கள் அடுத்தடுத்து நிகழ்வது, புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில்கூட நடக்காத துயரம். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இன்னும் தொடர்ந்து மருத்துவமனையில் இருக்கிறார்கள் எனும் தகவல் அச்சமூட்டுகிறது. அடுத்தடுத்து நிகழும் மரணங்களும், பாதிக்கப்பட்டவர்களின் அழுகுரலும் மனதை நடுங்கச் செய்கிறது. 

விஷச்சாரயத்திற்கு அன்பிற்குரியவர்களைப் பலிகொடுத்துவிட்டு அழுது துடிப்பவர்களுக்கு எத்தகைய வார்த்தைகளில் ஆறுதல் சொல்லிவிடமுடியும்? தற்போது அரசியல் கட்சிகள், இயக்கங்கள், ஊடகங்கள், மக்கள் என அனைத்து தரப்பினரின் கவனமும், கவலையும், கோபமும் அதிகரித்திருக்கிறது. அரசும், ஆட்சி நிர்வாகமும் விரைந்து செயல்பட்டு, இழப்பைக் குறைக்க போராடிக் கொண்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. ஆனால் நீண்ட கால பிரச்சனைக்கு குறுகிய கால தீர்வு என்கிற இந்த வழக்கமான அணுகுமுறை நிச்சயம் பலனளிக்காது. 

கடந்த ஆண்டு இதேபோல விழுப்புரம் மாவட்டத்தில் மெத்தனால் கலந்த விஷச்சாரயத்தை குடித்து 22 பேர் பலியானர்கள். அரசு தீவிர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தது. இப்போது பக்கத்து மாவட்டத்தில் அதே மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்து கொத்து கொத்தாக மக்கள் இறந்திருக்கிறார்கள் இப்போதுவரை எந்த மாற்றமும் நிகழவில்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

வாழ்வை மேம்படுத்துவார்கள் என நம்பி வாக்களிக்கும் தமிழ்நாட்டு மக்களை, கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மாறி மாறி நம்மை ஆட்சி புரிந்த அரசாங்கங்களே டாஸ்மாக் வைத்து மக்களைக் குடிக்க வைக்கிற அவலத்தைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். 'மதுவிலக்கு கொள்கை' என்பது எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் நேரத்து பேசுபொருளாக மட்டுமே முடிந்துவிடுகிறது.

டாஸ்மாக்கில் 150 ரூபாய்க்கு குடித்து போதைக்கு அடிமையானவர்கள் பணம் இல்லாதபோது 50 ரூபாய்க்கு கிடைக்கும் விஷச்சாரயத்தை வாங்கிக் குடிக்கிறார்கள். குடிக்கு அடிமையானவர்களின் பிரச்சனை என்பது தனிநபர் பிரச்சனை அல்ல, அந்த ஒவ்வொரு குடும்பத்தின், ஒட்டுமொத்த சமூகத்தின் பிரச்சனை என்பதை எப்போது நாம் அனைவரும் உணரப்போகிறோம்?

அரசாங்கங்களே குடிப்பழக்கத்தை ஊக்கப்படுத்தி சொந்த மக்கள் மீது பல ஆண்டுகளாக நடத்திவரும் வன்முறையை உடனடியாக நிறுத்தவேண்டும். குடிப்பழக்கத்திற்கு ஆளானவர்களை மீட்க மாவட்டம் தோறும் மறுவாழ்வு மையங்களைத் தொடங்கி அவர்களை குடி நோயிலிருந்து மீட்க வேண்டும். மாணவர்கள் கல்வியில் முன்னேற அரசு எத்தகைய தொலைநோக்கு செயல் திட்டங்களை நடைமுறைப் படுத்துகிறதோ, அதேபோல குடிப்பழக்கதிற்கு அடிமையானவர்களின் மறுவாழ்விற்கு முன்னுதாரணமான திட்டங்களை வகுத்து ஓர் இயக்கமாகவே செயல்படுத்த வேண்டும்.

அரசும், அரசியல் கட்சிகளும் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டால் மட்டுமே இனி எதிர்காலத்தில் இதுபோன்ற அவல மரணங்களைத் தடுக்கமுடியும். குறுகிய கால தீர்வைக் கடந்து தமிழ்நாடு முதல்வர் மதுவிலக்குக் கொள்கையில் மக்கள் நலன் சார்ந்த முடிவுகளை எடுப்பார் என மக்களோடு சேர்ந்து நானும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன். சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படும் விஷச்சாரயத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகத்திற்கு கடும் கண்டனம். இறந்த உயிர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். மருத்துவமனையில் இருப்பவர்கள் மீண்டு வர பிராத்தனை.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

சூர்யா படத்தில் இணைந்த சந்தோஷ் நாராயணன்

Published on 15/05/2024 | Edited on 15/05/2024
santhosh narayanan joined with suriya 44 movie

சூர்யா தற்போது தனது 42வது படமான ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  3டி முறையில் சரித்திரப் படமாக 38 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. சமீபத்தில் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் வருகிற ஏப்ரலில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. 

இப்படத்தைத் தொடர்ந்து தனது 43வது படத்திற்காக சுதா கொங்கராவுடன் கூட்டணி வைத்தார். இப்படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மா உள்ளிட்ட பிரபலங்களும் கமிட்டாகினர். கடந்த அக்டோபர் மாதம் வெளியான அறிவிப்பு வீடியோவில், படத்தின் தலைப்பு மறைக்கப்பட்டு 'புறநானூறு' என்ற டேக் லைன் மட்டும் இடம் பெற்றிருந்தது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ள நிலையில் அவருக்கு 100வது படமாக அமைந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் உள்ள கல்லூரியில் தொடங்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இப்படத்திற்கு நேரம் அதிகம் தேவைப்படுவதாகக் கூறி படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

இதற்கிடையில் திடிரென்று கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. மேலும் சூர்யாவின் 44ஆவது படமாக இப்படம் உருவாகும் என்றும் சூர்யாவின் 2டி நிறுவனமும் கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இடையடுத்து இப்படத்தில் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் நடிக்கவுள்ளதாகவும் ஜூன் இடையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த நிலையில் இப்படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்று சந்தோஷ் நாராயணன் பிறந்தநாள் காணும் நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு. இப்படம் மூலம் முதல் முறையாக சூர்யா படத்திற்கு இசையமைக்கவுள்ளார் சந்தோஷ் நாராயணன்.