ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனவர் சுரேஷ் சங்கையா. இப்பொழுது சத்திய சோதனை திரைப்படத்தினை இயக்கியிருக்கிறார், இப்படம் திரையரங்க வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக இயக்குநர் சுரேஷ் சங்கையாவைச் சந்தித்தோம், நம்மோடு அவர் பகிர்ந்து கொண்ட விசயங்கள் பின்வருமாறு...
முதல் படத்துக்குப் பிறகு ஆறு வருடங்கள் கேப் விழுந்தது வருத்தமாகத் தான் இருக்கிறது. அதற்கு நான் காரணமல்ல. கிடாயின் கருணை மனு படத்துக்குப் பிறகு உடனடியாக அடுத்த வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நடிகர்கள் தேர்வுக்கு நீண்ட காலம் எடுத்தது. அதனால் அந்தப் படம் செய்ய முடியவில்லை. அதிலே இரண்டு வருடங்கள் கழிந்துவிட்டன. இதற்கு நடுவில் எனக்குத் திருமணமும் நடந்தது. அதன் பிறகு நான் வாய்ப்பு கேட்கும்போது இரண்டு வருட கேப் ஏன் விழுந்தது என்கிற கேள்வி அனைவருக்கும் வந்தது.
அதன் பிறகு ஒரு போலீஸ் கதையைத் தயார் செய்தேன். வித்தியாசமான முறையில் செய்யப்பட்டிருந்ததால் அது எப்படி வொர்க் அவுட் ஆகும் என்று கேட்டார்கள். படம் எடுப்பதற்கு முன்பு அது எப்படி வரும் என்று காட்டுவது கடினம். அதன் பிறகு தான் இந்தப் படத்தைத் தொடங்கினோம். இதிலும் யாரை நடிக்க வைக்கலாம் என்கிற பேச்சுவார்த்தை பல காலம் நீடித்தது. அதன்பிறகு ஷூட்டிங் தொடங்கி மொத்த படமும் 19 நாட்களில் முடிக்கப்பட்டது.
இந்தப் படத்தில் பிரேம்ஜி செய்திருக்கும் கதாபாத்திரத்தில் நீங்கள் வேறு யாரையும் நினைத்துப் பார்க்க முடியாது. இந்தப் படத்தை நான் பலமுறை பார்த்துவிட்டேன். அந்த கேரக்டருக்கு அவர்தான் சரியாக இருக்கிறார். முதல் படத்தில் வறண்ட நிலப்பரப்பைத் தேர்வு செய்தேன். இந்தப் படத்தில் பாதி மாதம் கடந்த பிறகு போலீசாருக்கு ஏற்படும் வறண்ட மனநிலையைக் காட்டும்படி காட்சிகள் இருக்கும்.
இதுவரை தமிழ் சினிமாவில் பார்க்காத போலீஸ் ஸ்டேஷன் இந்தப் படத்தில் இருக்கும். ஒவ்வொரு கேரக்டரும் நம் மனதுக்குள் இருப்பது தான். நாம் ஒரு வேலை செய்துகொண்டிருந்தாலும் மனதுக்குள் இன்னொரு விஷயத்தை யோசித்துக் கொண்டிருப்போம். அதை அப்படியே திரையில் காட்டும்போது இயல்பாக அமைந்துவிடுகிறது.
நிறைய கேப் விழுந்ததால் இரண்டாவது படமே எனக்கு முதல் படம் போல் தோற்றமளித்தது. எனக்கு கிடைத்த பட்ஜெட்டுக்குள் தான் நான் படம் எடுக்க முடியும். கதைக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம். நாம் உண்மையாக இருந்தால் வேலைகளும் சரியாக நடக்கும்.
லோகேஷ் கனகராஜ் என்னுடைய முதல் படத்தைப் பாராட்டி ஒரு நேர்காணலில் பேசினார். மீண்டும் மீண்டும் படத்தைப் பார்த்ததாக சொன்னார். அப்படி பாராட்டுவதற்கு ஒரு பெரிய மனம் வேண்டும். அவர் போன்ற பெரிய இடத்தில் இருக்கும் ஒருவர் இவ்வாறு பாராட்டுவது பெரிய விஷயம். அவருக்கு நான் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்வாதாரத்திற்காக வேலை பார்ப்பது ஒன்று. மனத்திருப்திக்காக வேலை பார்ப்பது இன்னொன்று. நான் இரண்டாவது வகையைச் சேர்ந்தவன். பொருளாதார வலி என்பது ஒரு பக்கம் இருந்தாலும், நம்முடைய படைப்பு காலம் கடந்தும் பேசப்பட வேண்டும் என்பதே என்னுடைய முதன்மையான எண்ணமாக இருக்கிறது. கிடாயின் கருணை மனு படத்தை இன்று அனைவரும் பாராட்டும்போது, நாம் சரியான வழியில் தான் செல்கிறோம் என்கிற நம்பிக்கை ஏற்படுகிறது. மக்களோடு மக்களாக இணைந்து படம் செய்யும் மேஜிக் என்பது மிகச்சிலராலேயே செய்யப்படுகிறது. இவைதான் சாமானிய மக்களின் கதைகள்.