மலையாளத்தில் பல படங்களை நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் சுரேஷ் கோபி. தமிழில் தீனா, ஐ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். நடிப்பது மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். அதன்படி கடந்த 2016 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பின்பு அதே ஆண்டில் பாஜக-வில் இணைந்து தற்போது அதில் பயணித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சிவராத்திரி அன்று நடைபெற்ற விழா ஒன்றில் மதம் குறித்து சுரேஷ் கோபி பேசியுள்ளார். அது தற்போது வைரலாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவர் பேசுகையில், "நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். உலகத்தில் அந்த நம்பிக்கை உள்ள அனைவரையும் நேசிக்கிறேன். அதே சமயம் நான் தைரியமாக சொல்கிறேன், அந்த நம்பிக்கை இல்லாதவர்களை அதாவது கடவுள் மறுப்பாளர்களை வெறுக்கிறேன்.
கடவுளின் உரிமைகளை ஆபத்தில் ஆழ்த்த முயற்சிக்கும் எந்த சக்தியையும் நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன். மத நம்பிக்கை இல்லாதவர்களின் அழிவிற்காக நான் கருவறை முன் பிரார்த்தனை செய்வேன். அனைவரும் அதை செய்ய வேண்டும். எங்கள் கடவுள் பக்தி யாருக்கும் தீங்கு விளைவிப்பதல்ல. ஆனால் மத வழிபாடுகள், மத நிறுவனங்களை இழிவுபடுத்தும் யாரும் இவ்வுலகில் எந்த சூழலிலும் மகிழ்ச்சியான நல்ல வாழ்க்கையை வாழ முடியாது" என்றார்.
இவரது பேச்சுக்கு கேரளாவை சார்ந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மலையாள எழுத்தாளர் மாதவன், "சுரேஷ் கோபி அரசியல் இருந்தாலும் எனக்கு பிடிக்கும். அவரது மனிதநேயம் உட்பட அனைத்தும் நன்றாக உள்ளன. ஆனால் சில நச்சு அமைப்பில் அவர் நீண்ட காலம் நீடிப்பார் என்று நான் நினைக்கவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார் .மேலும் பலரும் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாஜக-வில் இணைந்த பிறகு சுரேஷ் கோபி பேசிய மதரீதியான கருத்துகள் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.