
விக்ரம் நடிப்பில் சித்தா பட இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வீர தீர சூரன் பாகம் 2’. இப்படம் இரண்டு பாகமாக உருவாகுவதாகவும் முதலில் இரண்டாவது பாகத்தை வெளியிட்டு பின்பு முதல் பாகத்தை வெளியிடலாம் என்ற வித்தியாசமான பிளானில் படக்குழு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தை ரியா ஷிபு தயாரித்திருக்க எஸ்.ஜே.சூர்யா, சுராஜ், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா வருகிற 20ஆம் தேதி நடக்கவுள்ளது. படம் வருகிற 27ஆம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில் படக்குழு புரொமோஷன் பணிகளை தொடங்கியுள்ளது. அந்த வகையில் படக்குழுவினர் ஒரு பேட்டியில் பட அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டனர். அதில் மலையாள நடிகர் சுராஜ் பேசுகையில் “சித்தா படம் பார்த்துட்டு அருண் குமாரிடம் பேசுவதற்காக அவரது நம்பரை தேடிக்கிட்டு இருந்தேன். அப்போதுதான் தயாரிப்பாளர் ஷிபு போன் பன்னி விக்ரம் சாருடன் படம் பன்றேன் என்றார். டைரக்டர் யாருன்னு கேட்டப்போ அருண் என அவர் சொல்ல, சார் அவரிடம் தான் பேச ட்ரை பண்ணிட்டு இருந்தேன், உடனே அவரை வர சொல்லுங்க என்றேன். அருண் வந்து கதை சொன்னார். ஆனால் எனக்கு ஒன்னுமே புரியல. இந்த கேரக்டருக்கு நான் ஓ.கே.வான்னு கேட்டேன். ஓ.கே.சார் நாம கண்டிப்பா பண்ணிடலாம் என கிளம்பிவிட்டார். அப்புறம் ஒரு நாளில் கதை குறித்தும் என் கேரக்டர் குறித்தும் விவரித்தார்.
முதல் நாள் படப்பிடிப்பு தொடங்கியது. டயலாக் இருக்கா என கேட்டேன். சின்னதா இருக்கென்று அந்த் டயலாக்கை சொல்லி கொடுத்தார். நடித்து முடித்துவிட்டேன். இரண்டாவது நாள் படப்பிடிப்பு ஆரம்பித்தது. மறுபடியும் எனக்கு டயலாக் இருக்கா என அருணிடம் கேட்க அவர் பெரிய டயலாக்கை கொடுத்தார். அதோடு சிங்கிள் ஷாட்டில் பேச வேண்டும் என்றார். எனக்கு மூணு ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது. நான் அப்படியே மெதுவா வெளியில போய் ஓடுறதுக்கு ட்ரை பண்ணேன். ஆனா ஏரியா தெரியல. ஷூட்டிங்கும் காட்டுக்குள்ள நடந்ததால வழி தெரியாம திரும்ப வந்துட்டன்” என்றார்.