இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் 89வது பிறந்தநாள் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுகாசினி, ஆர்.பார்த்திபன், இயக்குநர் வசந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டு பாலசந்தர் பற்றிய நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.
அப்போது பேசிய நடிகை சுகாசினி பாலசந்தரின் கவிதாலயா பலருக்கு சினிமா கற்றுக்கொடுத்த கல்லூரியாக இருந்திருக்கிறது. நடிகர் ரஜினிகாந்திற்கும் சினிமா கற்றுக்கொடுத்துள்ளது என்று அந்த நினைவுகளை பகிர்ந்தார்.
மேலும் அப்போது பேசியவர், “நான் முதன் முதலாக பார்த்த ஷூட்டிங் மூன்று முடிச்சு, அது எங்க வீட்டில்தான் நடைபெற்றது. துணி துவைக்கும் சீன் ஒன்று படத்தில் வரும், அதை எங்கள் வீட்டு பின்புறம்தான் எடுக்கப்பட்டது. அது ஒரு நல்ல நாஸ்டால்ஜியா. கலாகேந்திரா கார் வரும் அதில் ரஜினி சார், அடுத்து ஸ்ரீவித்யா, கடைசியாக கமல் சாரை பிக்கப் செய்துகொண்டு வரும். ரஜினி சாருக்கு அப்போது ரொம்ப பயமாக இருப்பார். ஏன் ஏன்றால் அப்போது அவர் புதிது என்பதால் யாரிடமும் அவ்வளவாக பேச மாட்டார். எங்க கதவுக்கிட்டயே சிகரெட் பிடிச்சிட்டு சுற்றிக்கொண்டிருப்பார். அந்த காட்சிகள் எல்லாம் இன்னும் எனக்கு நினவிருக்கிறது.
ஈராங்கி ஷர்மா ஒரு விஷயம் சொல்லியது நியாபகம் வருகிறது. ஈராங்கி ஷர்மா, கையை உயர்த்தி ரஜினிக்கு லுக் பார்க்க வைப்பாராம். அப்போதெல்லாம் ரஜினிக்கு லுக் மிகவும் சிரமமாக இருக்கும். ஒருவேளை கே.பாலசந்தர் சாரை பார்த்து பயமாக இருக்கும்போல, பிரேமை பார்த்துக்கொண்டிருந்த ரஜினி திடீரென கீழே குனிந்துவிட்டாராம். என்ன இது என்று பார்த்தால் ஈராங்கி ஷர்மா தொடை அரிக்கிறது என்று கையை கீழே கொண்டு சென்றுள்ளார் என்று தெரிந்திருக்கிறது. அப்படி சினிமா எதுவுமே தெரியாமல் வந்த ரஜினிசார் முதல் பலருக்கு கலாகேந்திரா ஒரு சினிமா கற்றுக்கொடுக்கும் கல்லூரியாக இருந்துள்ளது” என்று சுவாரஸ்யாமாக தெரிவித்துள்ளார்.