Skip to main content

"பாஜகவை ஆதரிக்கிறேனா.. அதை மக்கள் முடிவு செய்யட்டும்" - ராஜமௌலி பதில்

Published on 17/02/2023 | Edited on 17/02/2023

 

SS Rajamouli reacts to reports of him supporting BJP

 

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கியிருந்தார் ராஜமௌலி. இப்படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு’ பாடலுக்காக சிறந்த பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருது பெற்றார் இசையமைப்பாளர் கீரவாணி. இதையடுத்து 95வது ஆஸ்கர் விருதில் சிறந்த பாடல் (Original Song) பிரிவில் நாமினேஷன் லிஸ்டில் அந்த பாடல் இடம்பெற்றுள்ளது. வருகிற மார்ச் 12ஆம் தேதி ஆஸ்கர் விருது நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

 

இதனிடையே பாஜகவின் சித்தாந்தத்தை ஆதரிக்கும் வகையில் ராஜமௌலி படங்கள் இருப்பதாக விமர்சனம் எழுந்தது. தற்போது தி நியூ யார்கர் இணையதளத்திற்கு பேட்டி கொடுத்துள்ள ராஜமௌலி இந்த கேள்வி குறித்து பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், "முதலில் பாகுபலி திரைப்படங்கள் கற்பனையானவை. அதனால் என் படத்தின் கதாபாத்திரங்கள் பாஜகவின் சித்தாந்தத்தை தொடர்புபடுத்தி உள்ளது என்று கூறுவது பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது. 

 

ஆர்.ஆர்.ஆர் படத்தை பொறுத்தவரை அது ஒரு ஆவணப்படமும் இல்லை. வரலாற்றுக் கதையும் இல்லை. வரலாற்றில் இருக்கும் இரண்டு கதாபாத்திரங்களைக் கொண்டு கற்பனையாக எழுதப்பட்டது. இது போல் கடந்த காலத்தில் நிறைய படங்கள் உருவாகியிருக்கின்றன. பாஜகவை ஆதரிப்பதாக என் மீது விமர்சனம் வைப்பவர்களுக்கு நான் கூறுவது, ஆர்.ஆர்.ஆர் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் கதாபாத்திரத்தின் போஸ்டரை வெளியிட்ட போது முஸ்லீம் குல்லா அணிந்தது போல் வடிவமைத்திருந்தோம். கதைப்படி அவர் யார் என்பதை மறைத்து ஒரு இடத்திற்கு சென்றிருப்பார்.

 

இந்த போஸ்டரால் பாஜக தலைவர் ஒருவர் திரையரங்குகளை எரித்து விடுவதாக மிரட்டினார். மேலும், அந்த தொப்பியை அகற்றாவிட்டால் என்னை சாலையில் அடிப்பேன் என்று கூறினார். எனவே நான் பாஜகவை சேர்ந்தவனா இல்லையா என்பதை மக்கள் தாங்களாகவே முடிவு செய்து கொள்ளட்டும்" என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்