ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். இப்படம் 2023ஆம் ஆண்டு நடக்கும் ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பாக அனுப்பப்படும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் 95வது ஆஸ்கர் விருது போட்டியில் இந்தியா சார்பாக குஜராத்தி படம் 'செல்லோ ஷோ' தேர்வானதால் தனிப்பட்ட முயற்சியில் 15 பிரிவுகளின் கீழ் ஆஸ்கருக்கு விண்ணப்பித்துள்ளனர் ஆர்.ஆர்.ஆர் படக்குழு. இதன் காரணமாக தீவிர ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் ராஜமௌலி.
முன்னதாக ஆர்.ஆர்.ஆர் படத்தில் இந்து மதம் குறித்த சித்தரிப்பு அதிகமாக உள்ளதென விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் நகரில் நடைபெற்ற திரைப்பட விழாவில் கலந்து கொண்டு அதற்கு விளக்கமளித்துள்ளார் ராஜமௌலி. அவர் கூறுகையில், "பலரும் இந்து என்பது மதம் என நினைக்கிறார்கள். ஆனால் அப்படியல்ல. இன்றைய காலகட்டத்தில் தான் இந்து என்பது மதம். ஆனால், இந்து மதத்திற்கு முன்பு அது இந்து தர்மமாக இருந்தது.
இந்து தர்மம் என்பது வாழ்க்கை முறை, அது ஒரு தத்துவம். மதமாக எடுத்துக்கொண்டு பார்த்தால் நான் இந்து அல்ல. அதே சமயம் இந்து தர்மம் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் நான் தீவிர இந்து தான். நான் படத்தில் சித்தரிப்பது உண்மையில் பல நூற்றாண்டுகளாக இருக்கும் ஒரு வாழ்க்கை முறையைத்தான். வாழ்க்கையை எப்படி பார்க்க வேண்டும் என்பதையும், அதனால் வரும் முடிவுகள் குறித்து கவலைப்பட வேண்டாம் என்பதையும் இந்து தர்மம் போதிக்கிறது. எனவே, நான் இந்து தர்மத்தைப் பின்பற்றுகிறேன்" என பேசினார்.