


தெலுங்கு பட உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக பரபரப்பாக குற்றம் சாட்டிய தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி சில தினங்களுக்கு முன் திரைப்பட வர்த்தக சபை அலுவலகம் எதிரில் அரை நிர்வாண போராட்டம் நடத்தினார். பின்னர் பிரபல தயரிப்பாளரின் மகன் அடிக்கடி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி, பிரபல தயாரிப்பாளரான டகுபதி சுரேஷ் பாபுவின் மகனும், தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ராணா டகுபதியின் தம்பியுமான அபிராம் டகுபதியுடன் தான் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு தெலுங்கு திரையுலகில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த 'ஸ்ரீலீக்ஸ்' விவகாரம் தெலுங்கு சினிமாவில் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் பல வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் ஒருவரின் முகத்தை தோலுறித்துக் காட்டுவதாகவும், அவரது புகைப்படத்தை வெளியிடுவேன் எனக் கூறிய ஸ்ரீரெட்டி, தற்போது தெலுங்கில் முன்னணி இயக்குனரான கோனா வெங்கட் தன்னிடம் ஆபாசமாக பேசியதாக குற்றம்சாட்டி அவர் அனுப்பிய வாட்சாப் பதிவுகளை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் ஸ்ரீரெட்டி கூறிய குற்றச்சாட்டுக்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ள இயக்குனர் கோனா வெங்கட்.... "நடிகை ஒருவர் சினிமா உலகில் உள்ள பல பிரபலங்களை பற்றியும், என்னைப் பற்றியும் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுக்கள் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு, போலீஸ் விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும். உண்மை நிச்சயம் வெளியாகும். என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை நான் சட்டப்படி சந்திப்பேன்" என பதிவிட்டுள்ளார்.