பேட்ட படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன் த்ரில்லராக உருவாகி வரும் இப்படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முதல் கட்ட ஷூட்டிங் நடைபெற்று முடிந்த நிலையில் சிறிய இடைவேளைக்கு பின்னர் இரண்டாம் கட்ட ஷூட்டிங் மே 29ஆம் தேதி தொடங்கியுள்ளது.
இப்படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்க, ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார். மேலும், சுனில் ஷெட்டி, யோகி பாபு, ஆனந்த் ராஜ், போஸ் வெங்கட் ஆகியோரும் நடிக்கின்றனர்.
தளபதி படத்திற்கு பின்னர் ரஜினி படத்தில் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு மேற்கொள்ள, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். பேட்ட படத்தை தொடர்ந்து இப்படத்திற்கு அனிருத்தான் இசை அமைக்கிறார்.
இந்நிலையில் ஸ்ரீமன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது. “19 வருடங்களுக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறேன். என் சினிமா வாழ்க்கையிலேயே முதன்முறையாக தலைவர் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் நடிப்பது மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கும், லைகா நிறுவனத்துக்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.