
மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் ‘எல்2; எம்புரான்’ என்ற தலைப்பில் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது. ஆண்டனி பெரும்பாவூர் இப்படத்தை தயாரித்திருக்க முரளி கோபி கதை எழுதியுள்ளார். இப்படத்தில் மஞ்சு வாரியர், பிரித்விராஜ், டோவினோ தாமஸ், ஷிவதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரசிகர்களின் எதிர்பார்புக்கு மத்தியில் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக கடந்த 27ஆம் தேதி இப்படம் வெளியானது. ஆனால் கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது. இருப்பினும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று இரண்டு நாட்களில் உலகளவில் ரூ.100 கோடியும் 5 நாட்களில் ரூ.200 கோடியும் வசூலை ஈட்டியுள்ளது.
இப்படத்தில் சில காட்சிகள் 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தை சித்தரிப்பதாக சொல்லி வலதுசாரி ஆதரவாளர்கள் கூறினர். மேலும் வில்லனுக்கு பஜ்ரங் தல் அமைப்பின் தலைவர் பாபு பஜ்ரங்கியின் பெயரை குறிக்கும் வகையில் பல்ராஜ் பஜ்ரங்கி என இருப்பதாக சுட்டிக்காட்டினர். இதனால் சர்ச்சை ஆன நிலையில் படத்தில் 17 இடங்களில் காட்சிகள் நீக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது. பின்பு மோகன்லால் இந்த சர்ச்சை தொடர்பாக படத்தில் வந்துள்ள சில அரசியல் மற்றும் சமூகக் கருத்துகள் என் அன்புக்குரியவர்கள் பலருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியிருப்பதாக கூறி வருத்தம் தெரிவித்தார். மேலும் படத்தில் இருந்து சர்ச்சைக்குறிய காட்சிகளை நீக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறியிருந்தார்.
இதனிடையே கேரள முதல்வர் பினராயி விஜயன், “பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் பகிரங்கமாக படக்குழுவினருக்கு அச்சுறுத்தல் விடுப்பது கவலையளிக்கிறது” என தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டார். இதனிடையே முல்லை பெரியாறு அணை குறித்து தவறான காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் பிரித்விராஜ் தொடர்ந்து முல்லை பெரியாறு குறித்து பொய் பிரச்சாரம் செய்வதாகவும் பெரியாறு வைகை பாசன விவசாய சங்கம் கண்டனம் தெரிவித்தது. மேலும் அக்காட்சிகளை நீக்க வலியுறுத்தி வரும் ஏப்ரல் 2ஆம் தேதி போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்தது.
இப்படி ஏகப்பட்ட பிரச்சனைகள் படத்திற்கு வர தற்போது படத்தில் இருந்து கிட்டதட்ட மூன்று நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. அந்த புதிய பதிப்பு தான் தற்போது மறு தணிக்கை செய்து திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதில் வில்லன் பெயர் பல்ராஜ் பஜ்ரங்கி என இருந்த நிலையில் அதுவும் தற்போது பல்தேவ் என மாற்றப்பட்டுள்ளது. பல்ராஜ் பஜ்ரங்கி என்ற பெயர் நரோடா படியா படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பாபு பஜ்ரங்கியின் பெயருக்கு நெருக்கமாக இருப்பதாக சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பிரித்விராஜின் தாயார் மல்லிகா சுகுமாரன், தன் மகன் மட்டும் இப்படத்தின் சர்ச்சையில் குறிவைக்கப்படுவதாக கூறியிருந்தார். மேலும் “எம்புரான் படத்தில் ஏதாவது பிரச்சனை இருபந்தால் அதற்குப் படக்குழுவினர் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் என் மகனை மட்டும் பலிகடாவாக்க பார்க்கின்றனர்” எனக் கூறியிருந்தார். இது குறித்து கேரள பா.ஜ.க. தலைவர் கோபாலகிருஷ்ணனிடம் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பிய போது பிரித்விராஜின் மனைவியை விமர்சித்துள்ளார். அவர் பேசுகையில், “மல்லிகா சுகுமாரன் சினிமா பற்றி எதுவும் சொல்லவில்லை, மேஜர் ரவிக்கு எதிராக விமர்சனம் செய்து கொண்டிருந்தார். மேஜர் ரவி தனது மகன் பிருத்விராஜை தனிமைப்படுத்துவதாக அவர் கூறினார். ஆனால் அது சினிமா தொடர்பான விஷயம் இல்லை. மேஜர் ரவியை விமர்சிப்பதற்கு முன்பு, அவர் வீட்டில் இருக்கும் மருமகளை விமர்சிக்க வேண்டும். கேரள பாஜக பிரித்விராஜிடம் சொல்ல ஒரே ஒரு விஷயம் இருக்கிறது, அது அவரது மருமகள் ஒரு நகர்ப்புற நக்சல்” என்று கூறினார்.
முன்னதாக இந்திய ராணுவ ஓய்வுபெற்ற அதிகாரியும் பின்னர் பாஜகவில் சேர்ந்து தற்போது அதன் மாநில துணைத் தலைவராகவும் இருக்கும் மேஜர் ரவி, தனது சமூக வலைதளப்பதிவில் பிரித்விராஜ் மற்றும் படத்தின் எழுத்தாளர் முரளி கோபியை விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.