தெலுங்கு பட உலகில் கிளப்பிய புயலைத் தொடர்ந்து தற்போது சென்னையில் முகாமிட்டு தமிழ் சினிமா நடிகர்கள், இயக்குனர்கள் மீது பரபரப்பாக பாலியல் புகார் கூறி வரும் நடிகை ஸ்ரீரெட்டி 'தமிழ் லீக்ஸ்' என்ற பெயரில் இயக்குநர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், சுந்தர் சி, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலரும் சினிமா வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திவிட்டு ஏமாற்றியதாக கூறி சர்ச்சையை கிளப்பினார். இதையடுத்து ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ், தான் ஏற்பாடு செய்யும் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை ஸ்ரீரெட்டி அனைவரின் முன் நடித்தும், நடனமாடியும் தன்னை நிரூபித்தால், தான் அடுத்து இயக்கும் படத்தில் வாய்ப்பு தருவதாக விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் நடிகை ஸ்ரீரெட்டியிடன் நாம் இதுகுறித்து கேட்டபோது.... "நான் எந்த படம் என்று சொல்வதற்கு முன்னால் அது 'ரிபெல்' படம் என்று லாரன்சிற்கு எப்படி தெரியும்...? இதில் இருந்தே தெரியவில்லையா அவருக்கு இதில் சம்பந்தம் உள்ளதா இல்லையா என்று. மேலும் அவர் தங்கியிருந்த கோல்கொண்டா ஹோட்டல் ஊழியர்களையும், படக்குழுவினரையும் கேட்டாலே தெரியும் அவர் அறையில் ருத்ராட்ச மாலையும், குரு ராகவேந்திரா சாமிகள் படம் இருந்ததா இல்லையா என்று. அது மட்டுமில்லாமல் என்னோடு சேர்ந்து என் தோழியும் இவரிடம் அதேபோல் பாதிக்கப்பட்டுள்ளார். வேண்டுமானால் லாரன்ஸ் அப்படி பிரஸ் மீட் வைக்கும் பட்சத்தில் அதில் என் தோழியும் கலந்துகொண்டு இன்னும் தெளிவுப்படுத்துவார். எனக்கும் கடவுள் நம்பிக்கை அதிகம் அதே குரு ராகவேந்திரா சுவாமிகளுக்கு தெரியும் லாரன்ஸ் தவறு செய்தாரா இல்லையா என்று. ஒரு நாள் கண்டிப்பாக அவருக்கு தண்டனை கிடைக்கும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.
மேலும் அவர் என் நடிப்பு திறமையை பற்றி பேசியதற்கும், வாய்ப்பு தருகிறேன் என்று சொன்னதற்கும் அவரை பாராட்டி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் பிரஸ் மீட்டில் நடிக்க வேண்டும் அவர் கூறியதை நான் சவாலாக ஏற்கிறேன். பிரெஸ் மீட்டிற்கு நான் ரெடி. அவர் ரெடியா..? மேலும் பிரஸ் மீட் அல்லாத தனி இடத்தில் வைத்துக்கொள்வதற்கும் நான் ரெடி. எனக்கு யாரையும் தண்டிக்க எண்ணம் இல்லை. அவரவர் செய்த தவறை அவரவர் உணர்ந்தாலே போதும். அதுபோல் லாரன்ஸ், நான் தப்பு செய்யவில்லை இருந்தும் ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு தருகிறேன் என்று முன் வந்ததற்கு நன்றியும், அவர் தப்பு செய்ய வில்லை என்று சொன்னதற்கு மன்னித்து மறந்து விடுகிறேன். மேலும் எது எப்படியோ இவராவது கடைசியில் முன் வந்து என் காயங்களுக்கு மருந்து போடுவதுபோல் நடந்துகொண்டு எனக்கு வாய்ப்பளித்தால் கடவுள் இவரை ஆசிர்வதிக்கட்டும்" என்றார்.