கரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் மிகத் தீவிரமாகப் பரவிவருகிறது. தமிழகத்திலும் அதிகளவில் கரோனா பாதிப்பு இருந்துவருகிறது. இதனால், முழுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் ஆசிரியர்கள் வகுப்புகள் எடுத்துவருகின்றனர். இந்நிலையில், சென்னை கே.கே நகரில் அமைந்துள்ள பத்மா சேஷாத்திரி பால பவன் தனியார் பள்ளியில் பயிலும் மாணவிகள், தங்களின் ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாகப் புகார்கள் அளித்துள்ளனர். இதையடுத்து அவர் தற்போது போலீசாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருக்கிறார்.
ஆசிரியரின் இந்தச் செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், நடிகையும் மக்கள் நீதி மய்யத்தின் தலைமை பேச்சாளருமான ஸ்ரீபிரியா கண்டனம் தெரிவித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... "மாணவர்களை துன்புறுத்தும் ஆசிரியர்... இதுபோன்ற நடத்தையை யாருடனும் விவாதிப்பது சரியா? அல்லது தவறா? என்று குழந்தைக்குத் தெரியாதபோது, அது பாதிக்கப்படக்கூடிய பெண் எந்தவகையில் பாதிக்கப்பட்டாலும், ஒவ்வொரு குழந்தையும் குறிப்பாக பெண்கள், ஏதோவொரு விதத்தில் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள். எனவே ஆசிரியரிடமிருந்து இதுபோன்ற பிரச்சினைகள் வரும்போது நாம் உடனடியாக அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.