கரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்திருப்பதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை தேசிய ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் பல்வேறு வகையான துறைகளின் நிலை கவலைக்கிடமாகியுள்ளது. குறிப்பாக பொழுதுபோக்கு சினிமா ஷுட்டிங் நிறுத்தப்பட்டிருப்பதால் தினக்கூலி பணியாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகியுள்ளது. அதேபோல பைனான்ஸ் எடுத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களின் நிலையம் கவலையாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து பிரபலத் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு ட்விட்டரில், "பொழுதுபோக்கு அம்சங்களுக்காகத் தேவை தற்போது அதிகமாக உள்ளது. இது போன்ற பரிசோதனைக் காலங்களில் நம்முடைய படைப்பை ஒரு அத்திவாசியப் பொருளாகப் பார்ப்பது நமக்கு ஒரு பெரிய அனுபவம். இப்போது வரை திரைத்துறை அதிகமாகக் கஷ்டப்பட்டுவிட்டது. ஊரடங்குக்குப் பிறகு துறை மீண்டு எழுவதற்கான வரிச் சலுகைகள், நிவாரணங்கள் கிடைக்கும் என்று நம்புவோம்" என்று பதிவிட்டுள்ளார்.