நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்து செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கப்படுகிறது. 45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே ரெம்டெசிவிர் கொடுக்கப்பட்டுவந்த நிலையில், 2வது அலையின் தீவிர தாக்கத்தால் அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த மருந்து கொடுக்கப்படுகிறது.
செயற்கை சுவாசம் தேவைப்படும் நிலையில் உள்ள கரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் கொடுக்கும்போது இறப்பு விகிதம் பெருமளவில் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால், இந்தியாவில் இப்போது இராண்டாம் அலை மிகவும் தீவிரமாக இருப்பதால், ரெம்டெசிவிர் மருந்து கிடைப்பதில் பல மாநிலங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பல தனியார் மருத்துவமனைகளில் இந்த மருந்து கிடைக்கவில்லை என நோயாளிகள் குற்றஞ்சாட்டுகின்ற சூழல் தற்போது அதிகரித்துவரும் நிலையில், ரெம்டெசிவிர் மருந்து குறித்து நடிகர், சமூக சேவகர் சோனு சூட் சமூகவலைதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில்...
"ஒரு எளிய கேள்வி:
ஒரு குறிப்பிட்ட ஊசி எங்கும் கிடைக்கவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும் பட்சத்தில், ஏன் ஒவ்வொரு மருத்துவரும் அந்த ஊசியை மட்டுமே பரிந்துரைக்கிறார்கள்?
மருத்துவமனைகளே அந்த மருந்தைப் பெற முடியாதபோது, ஒரு சாதாரண மனிதர் அதை எப்படி பெறுவார்?
அந்த மருந்துக்கு மாற்றாக நாம் ஏன் இன்னொரு மருந்தைப் பயன்படுத்தி ஒரு உயிரைக் காப்பாற்றக் கூடாது?” என பதிவிட்டுள்ளார்.