பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட், கரோனா நெருக்கடி நிலை அமலில் இருந்த போது, வெளிநாடுகளில் சிக்கித் தவித்தவர்கள் இந்தியா திரும்ப உதவுதல், விவசாயி ஒருவருக்கு டிராக்டர் வாங்கிக்கொடுத்தது, ஒரு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கியது உட்பட பல்வேறு உதவிகள் செய்து வந்தார். இது பலரது பாராட்டையும் பெற்றது. இதனையடுத்து, கரோனா நெருக்கடி நிலை சற்று தளர்ந்த பின்னும் சமூக வலைதளம் வாயிலாக தன்னிடம் உதவி கோருபவர்களுக்கு தன்னால் இயன்ற உதவியைத் தொடர்ந்து செய்து வருகிறார்.
இந்த நிலையில், அவர் தன்னுடைய 10 கோடி மதிப்பிலான சொத்துக்களைத் தனியார் வங்கி ஒன்றில் அடமானம் வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில், மும்பை பகுதியில் அமைந்துள்ள அவருக்குச் சொந்தமான 2 கடைகள் மற்றும் 6 வீடுகள் அடக்கம். அடமானம் மூலம் கிடைத்த பணத்தை அவர் சமூக பணிகளுக்காக செலவிட உள்ளதாக சோனு சூட்டின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக சோனு சூட்டிடம் இருந்து ஏதேனும் அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, சமூக வலைதளங்களில் சோனு சூட்டிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.