தற்போதைய கரோனா காலகட்டத்தில் பலரும் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். துணை நடிகர்களாக நடித்தவர்கள் காய்கறி விற்பதற்கும் மீன் விற்பதற்கும் செல்வதாகச் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் மஹாராஷ்ட்ரா மாநிலம் புனேவைச் சேர்ந்த பாட்டி ஒருவர் சாலையின் ஓரத்தில் சிலம்பம் சுற்றி சாலையில் செல்பவர்களிடம் அன்பளிப்புகளைப் பெற்று வந்தார். இந்த வீடியோ வைரலாக பரவியது. இந்தத் தள்ளாத வயதில் இவ்வளவு அழகாகச் சிலம்பம் சுற்றும் பாட்டியைப் நெட்டிசன்கள் பாராட்டி வந்தனர்.
இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் தனது ட்விட்டரில் அந்த பாட்டியின் வீடியோவை பகிர்ந்து. இவரைக் கண்டுபிடிக்க உதவுங்கள் என்று வேண்டுகோள் வைத்தார். அதனை ஏற்று பலரும் அந்தப் பாட்டியைக் கண்டுபிடிக்க உதவினார்கள். இறுதியாக அந்தப் பாட்டியைக் கண்டுபிடித்து தொடர்புகொண்டுவிட்டதாக ரித்தேஷ் தெரிவித்திருந்தார்.
அவரை அடுத்து நடிகர் சோனு சூட்டும் சிலம்பம் சுற்றும் வைரல் பாட்டிக்கு உதவ முன்வந்துள்ளார். இது குறித்து சோனு சூட் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, ‘அவரை பற்றிய தகவல்கள் எனக்குக் கிடைக்குமா? அவரோடு சேர்ந்து ஒரு சிறிய பயிற்சி பள்ளி தொடங்கி நம் நாட்டுப் பெண்களுக்கு தற்காப்பு கலைகளைப் பயிற்றுவிக்க விரும்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.