பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட், கரோனா நெருக்கடிநிலை அமலில் இருந்தபோது, வெளிநாடுகளில் சிக்கித் தவித்தவர்கள் இந்தியா திரும்ப உதவியது, விவசாயி ஒருவருக்கு டிராக்டர் வாங்கிக் கொடுத்தது, ஒரு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் ஃபோன்கள் வழங்கியது உட்பட பல்வேறு உதவிகள் செய்து வந்தார். இது பலரது பாராட்டையும் பெற்றது. இதனையடுத்து, கரோனா நெருக்கடிநிலை சற்று தளர்ந்த பின்னும் சமூக வலைதளம் வாயிலாக தன்னிடம் உதவி கோருபவர்களுக்குத் தன்னால் இயன்ற உதவியைத் தொடர்ந்து செய்து வருகிறார்.
தற்போது, நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் 'ஆச்சார்யா' படத்தின் படப்பிப்பில் நடிகர் சோனு சூட் கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு நடிகர் சோனு சூட் இலவசமாக 100 ஸ்மார்ட்போன்களை வழங்கினார். இதனையடுத்து, அவர்கள் அனைவரும் நடிகர் சோனு சூட்டிற்கு நன்றி தெரிவித்தனர்.
நடிகர் சோனு சூட்டின் உதவும் மனப்பான்மையைப் பாராட்டும் விதமாக ஆந்திராவில் உள்ள ஒரு ஐ.ஏ.எஸ் பயிற்சி நிறுவனம், தங்கள் நிறுவனத்தின் கலை மற்றும் மனிதநேயத் துறைக்கு அவர் பெயரைச் சூட்டியதும் தெலுங்கானாவில் உள்ள துப்பதண்டா என்கிற கிராமத்தில் நடிகர் சோனு சூட்டிற்கு அவ்வூர் மக்கள் கோவில் கட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.