நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் கடந்த நான்கு மாதங்களாக தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது. சமீப நாட்களாக தான் சில தளர்வுகளுடன் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
முதல் லாக்டவுன் சமயத்தில் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்ல மிகவும் சிரமப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள், வீடு திரும்ப பல உதவிகளைச் செய்தார் சோனு சூட். இதுமட்டுமல்லாமல் இந்த காலகட்டத்தில் பலருக்கும் உதவி புரிந்துவருகிறார்.
தற்போது மாணவர்களுக்கு நடைபெற இருக்கும் நுழைவு தேர்வுகளுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளத்தில் நடைபெற்ற ஒரு லைவ் வீடியோவில் அரசியல் குறித்து பேசியுள்ளார் சோனு சூட்.
அதில், “கடந்த 10 ஆண்டுகளாகவே அரசியலில் இணைய எனக்கு பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. நீ ஒரு நல்ல தலைவனாக இருக்கமுடியும் என்று பலரும் என்னிடம் கூறினார்கள். ஆனால் நான் ஒரு நடிகனாக உணர்கிறேன். நான் போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய உள்ளது. நான் விரும்பும் பல விஷயங்களை நான் செய்ய வேண்டியுள்ளது. ஒருவர் எப்போது வேண்டுமானாலும் அரசியலில் நுழையலாம் ஆனால் நான் ஒரே நேரத்தில் இரண்டு படகுகளில் சவாரி செய்ய விரும்பவில்லை.
ஒருவேளை அரசியலுக்கு வந்தால் நான் என்னுடைய 100 சதவீத உழைப்பை வழங்குவேன். யாருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பதை உறுதி செய்வேன். நான் அவர்களின் பிரச்சனையை தீர்ப்பேன். ஆனால் அதற்கு நிறைய நேரம் தேவைப்படும். எனவே, தற்போது நான் அதற்கு தயாராக இல்லை என்று நினைக்கிறேன். நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை. எனவே தான் என்னால் எல்லா விஷயங்களையும் பரவலாக செய்யமுடிகிறது. எந்த கட்சியினரிடமும் அல்லது யாரிடமும் நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்க வேண்டியதில்லை” என்று தெரிவித்துள்ளார்.