கரோனாவால் தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் தங்களின் சொந்த ஊரைவிட்டு பிழைப்பிற்காக வேறு மாநிலத்திற்குச் சென்று உழைக்கும் தொழிலாளர்களும், தினக்கூலிப் பணியாளர்களும் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
அவர்கள் இருக்கும் இடங்களில் அவர்களுக்கான உணவு, தங்கும் இடம் எதுவும் கிடைக்காததால் சொந்த ஊருக்கே நடைப்பயணமாக செல்லத்தொடங்கிவிட்டனர். அவர்கள் படும் சிரமங்களைப் பார்த்து பிரபலங்கள் சிலர் சொந்தமாக பஸ் வசதிகளை அரசின் அனுமதி பெற்று, அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்து வருகின்றனர்.
நடிகர் சோனு சூத், ஏற்கனவே மும்பையில் பணிபுரிந்து வந்த கர்நாடக தொழிலாளர்களைச் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில், தற்போது உத்தரபிரதேசத்தில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்காகவும் பேருந்து ஏற்பாடு செய்துள்ளார் சோனு சூட். இதற்காக உ.பி அரசிடம் அனுமதியும் பெற்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "என்னைப் பொறுத்தவரை இது ஒரு உணர்வுப்பூர்வமான பயணம். இந்தத் தொழிலாளர்கள் தங்கள் வீட்டை விட்டு இப்படித் தெருக்களில் அலைந்து திரிவதைப் பார்க்கையில் மனம் வலிக்கிறது.
கடைசி புலம்பெயர் தொழிலாளி தன் குடும்பத்தோடு சேரும்வரை அவர்களை நான் அவர்களின் சொந்த மாநிலங்களுக்குத் தொடர்ந்து அனுப்பிக் கொண்டே இருப்பேன். இது என் இதயத்துக்கு நெருக்கமான விஷயமாக உள்ளது. இதற்காக என்னிடம் உள்ள அனைத்தையும் கொடுப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.