இந்தியத் திரையுலகின் பிரபல வில்லன் நடிகர் சோனு சூட். அனுஷ்காவுடன் 'அருந்ததி', சிம்புவுடன் 'ஒஸ்தி' உள்ளிட்ட படங்களிலும் வில்லனாக நடித்துள்ளார்.
பஞ்சாபைச் சேர்ந்த சோனு சூட், கரோனா ஊரடங்கின் போது புலம்பெயர் தொழிலாளர்கள், தங்களது சொந்த ஊருக்குச் செல்ல உதவினார். மேலும் சமூக வலைதளம் மூலமாகக் கல்வி, மருத்துவம் தொடர்பாக உதவி கேட்பவர்களுக்கும் தனது உதவிக்கரத்தை நீட்டி வருகிறார்.
இந்த நிலையில், சோனு சூட்டை பஞ்சாப் மாநிலத்தின் அடையாளமாக நியமிக்க வேண்டுமென, பஞ்சாப் மாநிலத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி கருணா ராஜு, இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குப் பரிந்துரை செய்திருந்தார். இப்பரிந்துரையை இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது.
நேர்மையாக வாக்களிப்பது தொடர்பாக பஞ்சாப் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த, சோனு சூட்டை பஞ்சாப் மாநிலத்தின் அடையாளமாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சோனு சூட், பஞ்சாப் மாநில அடையாளமாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து பேசுகையில், "எப்போதையும் விட இப்போதுதான் எனது பெற்றோர் இல்லை என்பதை நினைத்து வருந்துகிறேன். அவர்களைப் பெருமைப்படுத்துவேன் என்று எப்போதும் அவர்களிடம் கூறுவேன். எங்களது சொந்த ஊரான மோகா முழுக்க எனது பெயரை அறியச் செய்வேன் என்றும் அவர்களிடம் உறுதியளித்திருந்தேன்.
இது எல்லாமே எனது பெற்றோரின் ஆசிர்வாதங்கள் தான். என்னை பஞ்சாபின் அடையாளமாக நியமித்துள்ளனர். மேலே இருந்து என் பெற்றோர் என்னைப் பார்த்து புன்னகைப்பதை நான் உணர்கிறேன். இது மிகப்பெரிய பொறுப்பு. இதை சுமக்கும் திறன் எனக்கு இருக்கிறது என நினைக்கிறேன். என்னுள் அசாத்தியமான துணிச்சலையும், வலிமையையும் நான் உணர்கிறேன். அது எங்கிருந்து வருகிறது என்று எனக்கு தெரியவில்லை.
ஒரு பக்கம் சிலர் என்னை விமர்சிக்கின்றனர். ஆனால் எனது நேர்மையான நோக்கமும், மக்களின் அன்பு மற்றும் நம்பிக்கையும் தான் என்னை இயக்குகிறது. அவர்களது நம்பிக்கையை சந்தேகப்படும் எந்த ஒரு நபராலும் போக்கிவிட முடியாது" என்று தெரிவித்துள்ளார்.