தமிழ்த் திரையிசை ரசிகர்கள் மறக்க முடியாத பாடலாசிரியரான மறைந்த நா. முத்துக்குமாரின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் இன்று. அவரது உதவியாளராக இருந்து பின்னர் 'நேரம்' படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவரும், இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் உதவி இயக்குநருமான பாடலாசிரியர் வேல்முருகன் அமரர் நா. முத்துக்குமாரை நினைவுகூர்ந்து அஞ்சலி கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.
அண்ணாவின் குரல்
அண்ணாவின் கைப்பேசி எண்ணை
அவர் இறந்து
ஏழு வருடங்கள் கடந்தும்
நினைவில் வைத்திருக்கிறேன்
அண்ணாவின் குரலை
அதன் வழியே
அமெரிக்காவிலிருந்தும்
சிங்கப்பூரிலிருந்தும் கேட்டு
அவ்வப்போது அவர் சொல்லும்
திருத்தங்களைப் பாடல்களில்
பதிவு செய்திருக்கிறேன்
அண்ணாவின் குரல்
என்னை
என் இயல்பை விட்டு இறக்கித்
தூர எறிந்திருக்கிறது
சில நேரங்களில் அன்பைக்கூடக்
கோபமாக நிரப்பியிருக்கிறது
தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும்
பள்ளிக்கூட மாணவன் போல
கடகடவென்று சொல்லிவிடுவேன்
அண்ணாவின்
கைப்பேசி எண்ணை
எண் தற்காலிகமாக
நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்ற
முகம் தெரியாத பெண்ணின் குரல்
எங்கே கேட்டுவிடுமோ
என்ற ஐயத்திலேயே
அழைக்க எடுத்து அழைக்காமலேயே
விட்டுவிடுகிறேன்
ஊர் உலகமே திரண்டு
வழிகளில் பார்த்தோர் எல்லாம்
அச்சச்சோ என்று கன்னத்தில் போட்டுக் கண்ணீர் சிந்தக்
கவிதைகள் சொன்ன வாயில்
மஞ்சள் கலந்த அரிசியைப் போட்டு
சிதையில் வைத்தோம்
ஏழு வருடத்திற்கு முன்பு
அண்ணாவை எரித்தோம்
அவர் விரும்பிய கடற்கரையில்
கரைத்தோம்
ஆனாலும் அவர் குரல் காதில்
கேட்டுக்கொண்டேயிருக்கிறது
அதை எப்படி எரிப்பது
அதை எப்படிக் கரைப்பது.