Skip to main content

சினேகன் மீதான வழக்கு ரத்து

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
snehan jayalakshmi issue

பாடலாசிரியரும் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகியுமான சினேகன், தான் நடத்தி வருகிற ‘சினேகம்’ என்ற அறக்கட்டளையின் பெயரில் சமூக வலைத்தளத்தில் போலிக் கணக்குகள் தொடங்கி பணம் வசூலித்து வருவதாக நடிகையும் பாஜக பிரமுகருமான ஜெயலட்சுமியின் மீது சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதன் பிறகு அதே பெயரில் அறக்கட்டளை நடத்தி வரும் ஜெயலட்சுமி, பொதுவெளியில் தன் மீது அவதூறு பேசியுள்ளதாக சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். 

பின்பு இருவரையும் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். ஆனால், சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை ஜெயலட்சுமி மீண்டும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும் இது தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்திலும் ஜெயலட்சுமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அவதூறு பரப்பும் வகையில் பேசிய பாடலாசிரியர் சினேகன் மீது வழக்குப்பதிவு செய்ய எழும்பூர் மேஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார். அதனடிப்படையில் திருமங்கலம் காவல்துறையினர் சினேகன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சினேகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவானது நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சினேகன் தரப்பு, ஜெயலட்சுமி மீது தான் கொடுத்த புகாருக்கு பதில் புகாராக, ஜெயலட்சுமி தன் மீது பொய் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சினேகன் மீது திருமங்கலம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்