கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. 2014 ஆம் ஆண்டு வெளியான 'ஜிகர்தண்டா' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இப்படத்தை கார்த்திகேயன் சந்தானம் மற்றும் கதிரேசன் தயாரித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளார். தீபாவளியை முன்னிட்டு கடந்த 10 ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
படத்தைப் பார்த்த திரைப் பிரபலங்கள் பலரும் பாராட்டிய நிலையில் ரஜினிகாந்த் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் ஒரு குறிஞ்சி மலர். கார்த்திக் சுப்புராஜின் அற்புதமான படைப்பு, வித்தியாசமான கதை மற்றும் கதைக்களம். சினிமா ரசிகர்கள் இதுவரைக்கும் பார்க்காத புதுமையான காட்சிகள். 'லாரன்ஸால்' இப்படியும் நடிக்க முடியுமா.? என்ற பிரம்மிப்பை நமக்கு உண்டாக்குகிறது, எஸ்.ஜே சூர்யா, இந்நாளின் திரை உலக நடிகவேள். வில்லத்தனம், நகைச்சுவை. குணசித்திரம் என மூன்றையும் கலந்து அசத்தி இருக்கிறார். ” எனக் குறிப்பிட்டார். அதோடு படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினார்.
இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ், ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே சூர்யா உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது ரஜினி பாரட்டியது குறித்து பேசிய எஸ்.ஜே சூர்யா, “எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜியைவிட பெரிய ஜாம்பவான் நடிகவேள் எம்.ஆர்.ராதா. அவருடன் ரஜினி என்னை ஒப்பிட்டுப் பேசியது இந்த பிறவியில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு. அடுத்தாக ‘கில்லர்’ என்ற படத்தை எடுக்கப்போகிறேன். அதற்கு, அவரின் பாராட்டு மிகவும் ஊக்கமளிக்கும் வகையில் இருந்தது. அவரின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மனதிலிருந்து வந்தது. குறிஞ்சி மலர் என ரஜினி குறிப்பிட்டது எங்களுக்கு பூஸ்ட் கொடுத்தது. அவரின் பாராட்டுக்கேற்ப நன்றாக நடித்து மக்களை இன்னும் சந்தோஷப்படுத்த வேண்டும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “படத்தில் கலை தான் உன்னை தேர்ந்தெடுக்கிறது என்று சொல்வது போல, கலை என்னை தேர்ந்தெடுத்ததால் நல்ல நல்ல படங்கள் கிடைக்கிறது. அதற்கு உன்மையாக இருக்கும் வரை அது தொடரும் என நம்புகிறேன். நல்ல கதைகளை நாம் தேடி போனாலும், நல்ல கதைகள் நமக்கு வந்தால் தான் அதை நாம் பண்ணமுடியும். அப்படி வருவது என்பது வரம்” என்றார்.