Skip to main content

"எங்க அப்பாவை ரோட்டுல நிக்க வச்சுட்டாங்க"; கதறி அழுத சூர்யா - மேடையில் மனம் திறந்த சிவகுமார்

Published on 16/04/2022 | Edited on 16/04/2022

 

sivakumar talk about surya

 

2டி நிறுவனத்தின் சார்பில் சூர்யா ஜோதிகா இருவரும் ஓ மை டாக் என்ற படத்தை தயாரித்துள்ளனர். சரோவ் சண்முகம் இயக்கியுள்ள இப்படத்தில் அருண் விஜய்யின் மகன் அர்னவ் விஜய் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் விஜயகுமார், அருண் விஜய், வினய், மகிமா நம்பியார் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் 21ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ள நிலையில் படத்தின் விளம்பர நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் அருண் விஜய், அவரது மகன் அர்னவ் விஜய், விஜய் குமார் உள்ளிட்ட படக்குழுவினருடன் சூர்யாவின் தந்தை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். 

 

இவ்விழாவில் பேசிய சிவகுமார், "வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் படைப்புகளைப் போல் குழந்தைகளையும், செல்லப் பிராணிகளையும் மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம் இது. நானும் கிருஷ்ணன் பஞ்சு போன்ற ஏராளமான இயக்குநர்களிடம் திட்டு வாங்கியிருக்கிறேன். இந்தப்படத்தில் ஏழெட்டு குழந்தைகளுடன் இயக்குநர் மிகவும் பொறுமையாக காத்திருந்து, காட்சிகளை விளக்கிச் சொல்லி படமெடுத்திருக்கிறார். இதற்காக அவருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தைப் பார்த்து விட்டேன். மிக நேர்த்தியாக சர்வதேச தரத்தில் உருவாகி இருக்கிறது. 

 

கடந்தாண்டு ‘ஜெய் பீம்’ வெளியானது. நடிகர் சூர்யா, நீதியரசர் சந்துரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தது என்னுடைய பார்வையில் சூர்யாவின் வாழ்க்கையில் நடித்து உச்சம் தொட்ட படம் 'ஜெய்பீம்'தான். எனக்கும் என்னுடைய துணைவியாருக்கும் என்ன ஒரு அதிர்ச்சி என்றால், ‘இந்தப் பையன் ( சூர்யா) என்ன ஆகப் போகிறான்? என்று வருத்தப்பட்ட காலம் அது. ஒரு நாள் முழுவதும் வீட்டில் இருந்தாலும் நாலு வார்த்தை பேசினால் அதிசயம்தான். ஹோலி ஏஞ்சல்ஸ் என்ற பள்ளிக்கூடத்திற்கு அவனை மாற்றினோம். அங்கு எல்லாமே ஆங்கிலம் தான். இவனுக்கு தொடர்பில்லாத ஏரியா அது. வகுப்பறையில் நான்காவது வரிசையில் அமர்ந்திருப்பான். ஆசிரியர் கேள்வி கேட்டால், அப்படியே பத்தாவது வரிசைக்கு தப்பி விடுவான். பத்தாவது வரிசைக்கு கேள்வி வரும்போது, அங்கிருந்து மூன்றாவது வரிசையில் வந்து அமர்ந்து விடுவான். மூன்றாவது வரிசையில் இருக்கும் போது கேள்வி கேட்டால், கடைசி வரிசைக்கு சென்று விடுவான். வாழ்நாள் முழுவதும் கேள்வியில் இருந்து எப்படி தப்பிப்பது என்பதை மட்டும் யோசித்த பையன் சூர்யா. அந்தப் பள்ளி 100 சதவீத வெற்றியை எதிர்பார்க்கிற பள்ளி. அதனால் எங்களை அழைத்து பேசினார்கள். உங்கள் பையனை வேறு பள்ளியில் படிப்பை தொடர செய்யுங்கள் என கேட்டுக்கொண்டனர். நாங்களும் வேறு வழி இல்லாமல் செயின்ட் பீட்ஸ் என்ற பள்ளியில் சேர்க்க திட்டமிட்டோம். அந்தப் பள்ளியில் வழக்கம்போல் நன்கொடை கேட்டனர். நாங்களும் வழங்கினோம். அப்போது நான் 175 படங்களில் நாயகனாக நடித்து திரைத்துறையில் உச்சத்தில் இருந்த காலகட்டம். 1980-88 காலகட்டம் என்று நினைக்கிறேன். செயின்ட் பீட்ஸ் பள்ளிக்கூட வாசலில் வேகாத வெயிலில் வரிசையில் நின்று இருக்கிறேன். நான் வரிசையில் நிற்பதை சூர்யா பார்த்துக்கொண்டே இருக்கிறான். இறுதியாக  பள்ளிக்கூட முதல்வரைச் சந்தித்தேன். நன்கொடை ஓகே. பள்ளியில் படிப்பதற்கான சீட் கிடைத்த பிறகுதான் நன்கொடையை ஏற்றுக் கொள்வோம் என்றார். அந்த நிலையில் வீட்டுக்கு வந்தவுடன் கதறி அழுகிறான். அந்தப் பள்ளிக்கூடத்திற்கு போக மாட்டேன் என்று கதறி அழுகிறான். எங்க அப்பாவை சாலையில் நிற்க வைத்து விட்டார்கள் என கதறி அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறான். அதன்பிறகு அவனை சமாதானம் செய்து பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைத்தோம்.

 

இந்தப் பையன் தற்போது ‘ஜெய் பீம்’ என்றொரு படத்தை தயாரித்து, நடித்து உலகத்தையே ஜெயிக்கிறான். இது என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. இதெல்லாம் எனக்கு ஒரு கனவு போல் இருக்கிறது. இதெல்லாம் நம்மைவிட மேலேயிருந்து ஒருவன் பார்க்கிறான். அவன்தான் தீர்மானிக்கிறான். இவர்கள் இருவரும் அடைந்த உயரத்திற்கு மனித முயற்சி மட்டும் காரணம் அல்ல. அதையும் கடந்து இறைவனின் ஆசி இருக்கிறது என நம்புகிறேன். இதேபோல் இந்தப் படமும் வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்றார். 
 

 

 

சார்ந்த செய்திகள்