Skip to main content

"உங்கள் ஆட்சியில்தான் பொற்காலம் என்று சொல்ல வையுங்கள்" - சிவகுமார் வேண்டுகோள்!

Published on 07/05/2021 | Edited on 07/05/2021

 

vghsrg

 

தமிழகத்தின் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். சென்னை ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். அதேபோல், முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். முதலமைச்சராக பதவியேற்ற மு.க. ஸ்டாலினுக்கு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் சிவகுமார் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்...


"வணக்கம்! 

 

திமுக தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தமிழக முதல்வராக 5 முறை பதவி வகித்திருக்கிறார். 19 ஆண்டுகள் அவர் தமிழ்நாட்டை ஆட்சி செய்திருக்கிறார். 1996இல் திமுக 172 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்தது. அதற்குப் பின் 25 ஆண்டுகளுக்குப் பிறகு, கலைஞர் இறந்த பிறகு, 125 இடங்களில் தனிப் பெரும் கட்சியாக தற்போது பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றிபெற்றது ஸ்டாலினின் அவர்களுடைய இமாலய சாதனை. அதேபோல் உதயநிதி ஸ்டாலினும் முதல் தேர்தலிலேயே வெற்றிபெற்று, தாத்தாவிற்கேற்ற பேரன் என்பதை நிரூபித்துள்ளார். முதலமைச்சர் அவர்களுக்கு முதலிலே எனது வேண்டுகோள். கரோனா காலத்திலிருந்து நம் மக்களைக் காப்பாற்றுங்கள். மருத்துவமனைகளிலும் மருந்து கடைகளிலும் காலையிலிருந்து மாலைவரை மக்கள் கூட்டம் கூட்டமாக நிற்பது மனதுக்கு மிகவும் கடினமாக இருக்கிறது. மருத்துவமனைகளில் படுக்கை இல்லை. அப்படியே படுக்கைகள் இருந்தாலும் ஆக்சிஜன் இல்லை. ஆக்சிஜன் இருந்தால் வெண்டிலேட்டர் இல்லை. இந்தக் காலத்திலிருந்து மக்களைக் காப்பாத்துங்க. 

 

ஆந்திரா, கர்நாடகம், கேரளாவில் வசிப்பவர்கள் யாராக இருந்தாலும் அந்தந்த தாய் மொழிகளைப் படித்தே ஆக வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தமிழ் குழந்தைகள் தமிழ் கற்காமலே பட்டப்படிப்பு படித்துவிட்டு, வேலைக்குச் செல்லும் அவலம் இங்கே மட்டுமே இருக்கிறது. செம்மொழி மாநாடு நடத்தி தமிழுக்குப் பெருமை சேர்த்த முத்தமிழ் அறிஞரோட வாரிசு நீங்கள். இங்கு தமிழ் மொழியில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு நிச்சயம் வேலை உண்டு என்ற முறையை உண்டாக்கினால் தமிழ் நிச்சயமாக வாழும். ஏரி, குளங்களைப் பராமரித்து விவசாயம் செழிக்க உதவி செய்யுங்கள். கலைஞர் அவர்கள் அறிமுகப்படுத்திய உழவர் சந்தைக்கு உயிர் கொடுங்கள். அரசியல் சாணக்கியர் கலைஞர் அவர்களின் மடியில் வளர்ந்த நீங்கள், தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சியில்தான் பொற்காலம் என்று சொல்வதுபோல் ஒரு நல்லாட்சியை வழங்குங்கள். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்'' என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்