Skip to main content

சாத்தான்குளம் விவகாரம்: சிவகார்த்திகேயன் கண்டனம்!

Published on 29/06/2020 | Edited on 29/06/2020

 

sivakarthikeyan

 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் மெயின் பஜாரில் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் (வயது 55), அவருடைய மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் சாத்தான்குளம் காவல்துறையினரால் பொதுமுடக்க விதிகளை மீறி கடைகளைத் திறந்ததாகக்கூறி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

 

கோவில்பட்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், பென்னிக்ஸ் திங்கள்கிழமை இரவும், அவரது தந்தை ஜெயராஜ் செவ்வாய்க்கிழமை காலையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இருவரும் உயிரிழந்த சம்பவத்திற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாகவும், அரசின் விதிமுறைகளின்படி, குடும்பத்தில் ஒருவருக்குத் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்கவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார். தற்போது இந்தச் சம்பவத்திற்குப் பல பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் இதுகுறித்து ட்விட்டரில் தனது கண்டனத்தைப் பதிவிட்டுள்ளார். அதில், “கொடுமையான குற்றத்தைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்திற்கு முன்பு நிற்கவைத்து தண்டிக்கப்பட வேண்டும். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவருக்கும் நீதியைக் கொடுப்பதன் மூலம் ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை கொடுக்கும்படி அரசாங்கத்திடம் வேண்டுகோள் வைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்