சசிகுமார் நடிப்பில் இரா.சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நந்தன். இரா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ருதி பெரியசாமியும் முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனியும் வில்லன் கதாபாத்திரத்தில் பாலாஜி சக்திவேலும் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படம் இன்று(20.09.2024) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இப்படம் குறித்து சிவகார்த்திகேயன் பேசும் வீடியோவை ஜிப்ரான் அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சிவகார்த்திகேயன் பேசுகையில், “என்னுடைய அன்பு அண்ணன்கள் சசிகுமாரும் சரவணனும் சேர்ந்து கொடுத்திருக்கிற அருமையான படைப்பு நந்தன். சசிகுமார் ஒரு வித்தியாசமான ஒரு முயற்சி செய்திருக்கிறார், நிச்சயம் ஒரு வேறு மாதிரியாக நந்தன் இருக்கும் என நினைத்தேன். ஆனால் படம் பார்த்த பிறகு படத்தில் வரும் முதல் காட்சியிலே தெரிந்து விட்டது, இது ஒரு பயங்கரமான ஒரு படம் என்று. எனக்குத் தெரிந்து இப்படி ஒரு காட்சியை தமிழ் சினிமாவில் யாரும் எடுத்தது இல்லை.
சசிகுமார் மிக எதார்த்தமாக உண்மைக்கு நெருக்கமாக இப்படத்தில் இருந்தார். நிறைய இடத்தில் சிரித்தேன், நிறைய இடத்தில் யோசித்தேன். அது போக நிறைய இடங்களில் கண்கலங்கி விட்டேன். இறுதியாக கை தட்டி ரசித்தேன். இது அனைத்தையும் ஏற்படுத்தியது சரவணனுடைய எழுத்தும் அவருடைய டீம் எடுத்த விதமும்” என்றார். மேலும், “மதுரையில் இருந்து வந்து சுப்புரமணியபுரம் என்று ஒரு படம் பண்ணும் போது, நம்மாளு அவர் என தோன்றியது. நாடோடிகள் பண்ணும் போதும் அப்படியே தோன்றியது. ஆனால் சமீபத்தில் அவருடைய ரூட்டை மாற்றி அயோத்தி என்ற படம் கொடுத்தார். அதுக்கு பிறகு நந்தன் படத்தை சொல்லலாம். அவருக்கு இப்படி ஒரு படம் கிடைத்ததில் மகிழ்ச்சி. அவர் இன்னும் பெரிய லெவலில் ஜெயிக்க வேண்டும். இது என்னுடைய ஆசை.
அவர் இந்த துறையில் ரொம்ப பெரிய போராட்டங்களை சந்தித்திருக்கிறார். ஆனால் எங்கேயும் அதை சொன்னது கிடை யாது. நான் கூட சில வருடங்களுக்கு முன்னாடி மேடையில் அழுதேன். அவர் எதையுமே காட்டிக் கொள்ளாமல் உள்ளே அடக்கி வைத்துக்கொண்டு இருக்கிறார். அந்த வெறியும் வீரியமும் அயோத்தி படத்தில் எப்படி தெரிந்ததோ, நந்தன் படத்தில் மூணு மடங்காக தெரிகிறது. இது ரொம்ப நல்ல படம். ஆனால் எவ்ளோ பெரிய வெற்றி படமாக மாறும் என்பது மக்கள் கையில் இருக்கிறது. அப்படி வெற்றி படமாக மாறும் போது, சரவணன், சசிகுமார் போன்று நிறைய கலைஞர்கள் வர வேண்டும். மக்கள் இந்தப் படத்தை கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்” என்றார்.