Skip to main content

“முதலில் டாக்டர் வெளியாகும் அடுத்துதான் அந்தப் படம்...” - சிவகார்த்திகேயன்

Published on 23/11/2020 | Edited on 23/11/2020

 

sk

 

நேற்று நடைபெற்ற தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் வாக்குப் பதிவு செய்துவிட்டு, நடிகர் சிவகார்த்திகேயன் செய்தியாளர்களைச்  சந்தித்தார். அப்போது அவர் தான் நடித்து வரும் படங்களான 'டாக்டர்', 'அயலான்' படங்கள் குறித்துப் பேசியுள்ளார்.

 

அதில், “இந்தக் கரோனா காலத்தில் நாம் அனைவருமே பாரம்பரிய காலத்துக்கு வந்துவிட்டோம். யாரையாவது பார்த்தவுடன் கைகூப்பி வணக்கம் சொல்கிறோம். ஒழுங்காகக் கை கழுவிவிட்டுச் சாப்பிடுகிறோம்.

 

திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வழக்கமான சூழலுக்குத் திரும்பும். தீபாவளிக்குப் படங்கள் வெளியானபோது, முதல் 2 நாட்களுக்கு மக்கள் பலரும் திரையரங்குகளுக்கு வந்துள்ளனர். இன்னும் புதிய படங்கள் வெளியாகும்போது, மக்கள் திரையரங்கிற்கு வருவார்கள். இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக சஜக நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறோம். திரையரங்கம் மட்டுமல்ல அனைத்து வியாபாரமுமே அப்படித்தான் இருக்கிறது என நினைக்கிறேன்.

 

முதலில் 'டாக்டர்' வெளியாகும். பின்பு 'அயலான்' வரும். படங்கள் வெளியீடு குறித்து தயாரிப்பாளர்கள்தான் முடிவு செய்வார்கள். சில படங்கள் திரையரங்குகளில் வெளியானால் சரியாக இருக்கும். சில படங்கள் ஓடிடியில் வெளியானால் சரியாக இருக்கும். இன்றைய காலத்தை மனதில் வைத்து வியாபாரம் பண்ணுவதுதான் தயாரிப்பாளர்களின் எண்ணவோட்டமாக இருக்கும். படங்கள் எதில் வெளியானாலும் பெருவாரியான மக்களைப் போய்ச் சேர வேண்டும். அதுதான் என்னைப் போன்ற நடிகர்களின் ஆசை. மக்களுக்கு ரொம்பப் பிடிக்கும் கதைகளில் நடிக்கும்போது, கண்டிப்பாகப் போய்ச் சேரும்.

 

'டாக்டர்' படத்தில் இன்னும் ஒரே ஒரு பாடல் மட்டும்தான் படமாக்கப்படவுள்ளது. முக்கியமான காட்சிகள் அனைத்தையுமே கரோனா அச்சுறுத்தலுக்கு முன்பே படமாக்கிவிட்டோம். சின்னச் சின்ன காட்சிகள் மட்டுமே பாக்கி இருந்தது. அதைத் தான் இப்போது படமாக்கினோம்” என்று கூறியுள்ளார். 

 

 


 

சார்ந்த செய்திகள்