தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது அரசியல் வாழ்க்கையை எடுத்துக்கூறும் விதமாக சென்னையில் அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் வடசென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் 'எங்கள் முதல்வர்; எங்கள் பெருமை' என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மதுரையில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடந்தது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திருச்சியில் கடந்த 23ஆம் தேதி தொடங்கியது. இதை நடிகர் பிரபு தொடங்கி வைத்தார்.
இந்தக் கண்காட்சியை திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் பார்வையிட்டு வருகின்றனர். அந்த வகையில் சிவகார்த்தியேன் பார்வையிட்டார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "இந்த கண்காட்சியை பார்க்க வந்ததில் மிக்க மகிழ்ச்சி. மொத்தமாக பார்த்த பின்பு நான் தெரிஞ்சிக்கிட்டது ஒரே ஒரு விஷயம் தான். பெரிய உயரத்தை நாம் அடைய வேணுமென்றால் அதற்கு நிறைய வலிகளையும், தியாகங்களையும் தாண்டி தான் வரணும் என்கிறது. மிகப்பெரிய ஆளுமை கொண்ட மாபெரும் தலைவருடைய மகனாக இருந்தாலும் வாழ்க்கையில் நிறைய விஷயங்களை தாண்டி நிறைய விஷயங்களை சந்திச்சு நிறைய சாதனைகள் புரிஞ்சு இந்த இடத்துக்கு முதல்வர் வந்திருக்கார்.
பொதுவாக ஒரு துறையில் வெற்றி பெற்றார்கள் என்று சொன்னால், அதை பார்க்கும் போது நமக்கு ஒரு உந்துதலாக இருக்கும். இதை பார்க்கும் போது எந்த துறையை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கு ரொம்ப பெரிய உத்வேகமாக இருக்கும். வாழ்க்கையில் எவ்ளோ கஷ்டப்பட்டாலும் என்றாவது ஒரு நாள் நாம் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கையை இந்த கண்காட்சி ஏற்படுத்துகிறது.
இதற்கு என்னை அழைத்த அமைச்சர் கே.என் நேருக்கு நன்றி. நான் அவரை எங்க பகுதி பக்கம் ஓட்டு கேட்க வரும் போது சந்தித்துள்ளேன். அமைச்சர் கே.என் நேரு, பத்திரமாக அழைத்து வந்து கூட்டிட்டு போறோம் என்று நம்பிக்கை கொடுத்தார். அமைச்சர் அன்பில் மகேஷ் ஃபோனில் அழைத்து நீங்க வந்தது சந்தோசம் என்று சொன்னார். இப்படி எல்லாரும் அன்பால் மகிழ்ச்சியை கொடுத்துட்டாங்க. நேரம் கிடைக்கும் போது அனைவரும் வந்து பார்க்கவேண்டும். பார்க்கும் அனைவருக்கும் நிச்சயமாக ஒரு புது உணர்வு ஏற்படும்" என்றார்.