தென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத் தேர்தல், கடந்த ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில், இதுவரை வாக்குரிமை இல்லாத அசோசியேட் உறுப்பினர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் ஒரு தரப்பினர் வழக்கு தொடர்ந்த நிலையில் தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது நீதிமன்றம். பின்பு தேர்தலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, தேர்தலுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை ரத்து செய்தது.
இதையடுத்து, தென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல் நேற்று நடைபெற்றது. 2023 - 2026ஆம் ஆண்டிற்காக நடக்கும் இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு தீனாவை எதிர்த்து போட்டியிட்ட சபேஷ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனிடையே பாடகர் மனோ வாக்களித்துவிட்டு இசைக் கலைஞர்கள் சங்கம் குறித்து செய்தியாளர்களிடம் அதிருப்தி தெரிவித்தது, தற்போது இசைத்துறையினர் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது.
அவர் பேசியதாவது, “கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் போன்ற இசையமைப்பாளர்களிடம் வாசித்த கலைஞர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறாங்க. நோய்வாய்ப்பட்டதால் அவர்களால் நடக்க முடியாது. சினிமா துறையில் முதலில் தொடங்கப்பட்ட யூனியன் இசைக்கலைஞர்கள் யூனியன் தான். ஆனால், இதற்கு சரியான கட்டிடங்கள் கடந்த 5 வருஷமா எதுவும் இல்லை. இளையராஜா சார் எங்களுக்கு உதவி செய்யலாம் என்று பார்த்த போது, கோவிட் வந்தது.
இசைக்கலைஞர்களுக்கு அசோசியேட் உறுப்பினர்கள் இப்போது நிறைய உருவாயிருக்காங்க. எல்லா சங்கத்திலும் உறுப்பினர்கள் இறந்து போனால் ரூ. 4 லட்சம் கொடுக்கக்கூடிய நிலைமையில் இருக்காங்க. ஆனால் இசைச் சங்கம் ரூ.1 லட்சம் கொடுக்கக்கூடிய நிலைமையில் கூட இல்லை. அது மனசுக்கு ரொம்ப கஷ்டமான விஷயம். அதனால் இனிமே வரும் இளைஞர்கள் ஒன்றாக இணைந்து, சங்கத்தை நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும்.
முன்னாள் தலைவர் தீனா, முயற்சி எடுத்து பண்ணியிருந்தால் நிறைய மியூசிசியன் சப்போர்ட் பண்ணியிருப்பாங்க. ஆனால் யாருமே போய் கேட்கவில்லை. கோவிட் சமயத்தில் கூட யாரும் யாருக்கும் உதவி செய்யவில்லை. நான் தனிப்பட்ட முறையில் 250 பேருக்கு சாப்பாட்டுக்கான பொருட்கள் உதவியிருக்கேன். அந்தளவிற்கு கூட இந்த யூனியன் செய்யவில்லை. அதை நினைக்கும் போது தான் மனசு வருத்தமா இருக்கு. எது பண்ணாலும் தர்மம் வெல்லும். சுசீலா, ஜானகி, டி.எம்.எஸ். உள்ளிட்ட பலர் விட்டுப் போன சொத்து எவ்வளவோ இருக்கிறது. அதை நம்பி இருக்கும் கலைஞர்கள் நல்லா இருக்க வேண்டும்” என்றார்.