Skip to main content

சிம்புவுக்கு இது முதல் தடவையல்ல... - கைவிடப்பட்ட திரைப்படங்கள் லிஸ்ட்

Published on 14/08/2019 | Edited on 14/08/2019

நடிகர் சிம்பு மீது பொதுவாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், அவர் சினிமா ஷூட்டிங்கிற்கே வர மாட்டார், காலை ஒன்பது மணிக்கு ஷூட்டிங் என்றால் மாலை மூன்று மணிக்குதான் ஷூட்டிங்கிற்கே வருவார்' போன்றவை. இதுபோல பல விமர்சனங்கள், மன்மதன் படத்திலிருந்தே சிம்புவை பின் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இது ஒரு கட்டத்தில் முத்திப்போக 'செக்கச்சிவந்த வானம்' படத்தில் நடிக்க மணிரத்னம் சிம்புவை கமிட் செய்தார். பலருக்கும் ஆச்சரியம்தான். ஆனால் சிம்பு நமக்குக் கொடுத்தது மிகப்பெரிய ஆச்சரியம். கொடுத்த கால்ஷீட்டுக்கு சரியாக வந்து நடித்துக்கொடுத்துள்ளார் என்று சொல்லப்பட்டது. சிம்புவும் 'இனி நான் கமிட்டாகும் படங்களில் சரியாக நடித்துக்கொடுப்பேன், என் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் அனைத்தையும் என்னுடைய செயலால்  உடைத்துக்காட்டுவேன்' என்றார்.
 

simbu

 

 

இதன் பின் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தில் நடித்தார். அந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மாநாடு' என்ற படத்தில் நடிக்க சிம்பு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால், இந்தப்  படம்  தவிர்த்து 'மஹா' என்ற படத்தில் கெஸ்ட் ரோலிலும், 'மஃப்தி' என்னும் கன்னட பட தமிழ் ரீமேக்கிலும் சரியாக நடித்துக் கொடுத்துவிட்டார். 'மாநாடு' படத்தின் அறிவிப்பு வெளியாகி ஒரு வருட காலம் ஆக இருந்த நிலையில் திடீரென சுரேஷ் காமாட்சி, படத்தில் சிம்புவை நீக்கிவிட்டு வேறு ஒரு ஹீரோவை வைத்து படத்தைத் தொடங்குவதாக அறிவித்தார். இந்நிலையில் சிம்பு தரப்பிலிருந்து ஒரு அதிரடி அறிவிப்பு வெளியானது. சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க சிம்பு இயக்கத்தில் 'மகாமாநாடு' என்றொரு படத்தை உருவாக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு பட்ஜெட் ரூ.125 கோடியாம், ஐந்து மொழிகளில் எடுக்கப்படுகிறதாம். இந்த அறிவிப்புக்குப் பின்னர் சிம்பு போட்டிக்காகதான் இதை செய்துள்ளார் என்று பேசப்படுகிறது.

'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படம் வெளியாகி தோல்வியடைந்த சமயத்தில் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனும் ஒரு செய்தியாளர் சந்திப்பு வைத்து படப்பிடிப்புக்கு சிம்பு சரியாக வராதது குறித்தும் தனது வீட்டின் பாத்ரூமில் இருந்து டப்பிங் பேசியதாகவும் சொன்ன பிறகு சிம்பு, தனது ட்விட்டர் பக்கத்தில் 'ஹாலிவுட் தரத்தில்  ஒரு படம்' எடுப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பைப் பார்த்த சிம்பு ரசிகர்கள் பலர் சிலிர்த்துப்போய் சில்லரையை விட்டு எறிந்து கொண்டாடினார்கள். ஆனால், அந்தப் படத்தைப் பற்றி அதற்குப் பிறகு எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

தமிழ் சினிமாவில் இருக்கும் வியாபார சூழ்நிலையில் யார் கதாநாயகனாக இருந்தாலும் சில திரைப்படங்கள் கைவிடப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன, அல்லது மிகத் தாமதமாக வெளிவர வாய்ப்பிருக்கிறது. இது அனைத்து நடிகர்களுக்குமே நிகழக்கூடிய, நிகழ்ந்திருக்கும் ஒன்றுதான். ஆனால், சிம்பு விஷயத்தில் இது சற்றே அதிகம். அவர் நடிப்பதாக அறிவித்து பாதியிலேயே கைவிடப்பட்ட படங்கள் குறித்தும், அவர் நடித்து பாதியிலேயே கைவிடப்பட்ட படங்கள் குறித்தும் பார்ப்போம்.
 

kettavan


'வல்லவன்' வெளியாகி ஓரளவு வெற்றி பெற, சிம்பு அடுத்து 'கெட்டவன்' என்ற படத்தை இயக்கினார். இந்தப் படத்தின் பாடல்கள் கூட இணையத்தில் லீக்காகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. பிரபல தொகுப்பாளராகவும் மாடலாகவும் இருந்த லேகா சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால், படத்தின் ஷூட்டிங் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன் பிறகு லேகா சிம்புவை குறை சொல்லி தனது பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
 

ac


'நியூ' படத்தின் வெற்றியை தொடர்ந்து எஸ்.ஜே சூர்யா சிம்புவையும் அசினையும் வைத்தும் 'ஏசி' என்றொரு படத்தை எடுக்க இருந்தார். ஆனால், போட்டோஷூட்டுடன் படம் ட்ராப் ஆனது. 'வாலிபன்', நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ். சக்கரவர்த்தி தயாரிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு சிம்பு இயக்கி நடிப்பதாக இருந்த படம். யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டு ஒரு பாடலும் வெளியாகி இருந்தது. ஆனால், இந்தப் படமும் டேக்-ஆஃப் ஆகவில்லை. 
 

vettai mannan


'வேட்டை' படத்தில் ஆர்யா கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் சிம்புவைத்தான் தேர்வு செய்தார் லிங்குசாமி ஆனால், படத்தின் ஷூட்டிங்கிற்கு சிம்பு வராமல் காலதாமதம் செய்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து இவர்கள் இருவருக்கும் பிரச்சனைவர சிம்பு ‘வேட்டை மன்னன்’ என்னும் படத்தின் அறிவிப்பை வெளியிட்டு ஷூட்டிங்கை தொடங்கினார்.'கோலமாவு கோகிலா' படத்தை இயக்கிய நெல்சனின் முதல் படம் 'வேட்டை மன்னன்'. இந்தப் படத்தின் முதல் பாதி ஷூட்டிங் மட்டும் முடிவடைந்து இணையத்தில் டீஸரும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. ஆனால், படம் ட்ராப் ஆகிவிட்டது. 
 

kaan

 

 

கான்... செல்வராகவன் பல தடைகளுக்குப் பின்னர் முதன் முதலில் சிம்புவை வைத்து படம் எடுப்பதாக அறிவித்து, போஸ்டரும் வெளியானது. ஆனால், காரணம் தெரியாமலேயே இந்தப் படமும் ட்ராப்பானது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான படம் 'கோ'. இந்தப் படத்தில் முதலில் ஹீரோவாக கமிட்டாகியிருந்தவர் சிம்புதான். நாயகியை மாற்ற வேண்டும் என்று சொல்லியதால் இயக்குனர் நாயகனை மாற்றிவிட்டதாக சொல்லப்பட்டது. தனுஷின் ஆஸ்தான இயக்குனரான வெற்றிமாறன், முதலில் சிம்புவை வைத்துதான் 'வடசென்னை' இயக்குவதாக செய்திகள் வெளியாகின. பின்னர், அந்தப் படத்தில் தனுஷ் நடித்து வெளியாகி வெற்றிபெற்றது. சிம்பு ரசிகர்களால் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட 'மாநாடு' படமும் இந்த வரிசையில் சேர்ந்துவிட்டது. இதற்குப் போட்டியாக சிம்பு 'மகாமாநாடு' படத்தை அறிவித்திருக்கிறார். படப்பிடிப்பு நடந்து, படம் வெற்றிகரமாக எடுக்கப்பட்டு, வெளியாகி, வெற்றி பெற வாழ்த்துவோம். சிம்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்தப் படம் நிறைவேற்றவேண்டும்.

 

 

 

சார்ந்த செய்திகள்