நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கு பிறகு பாலிவுட்டில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியிருப்பது வாரிசு அரசியல். தற்போது தமிழ் சினிமாவிலும் இப்பேச்சு விவாதமாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நடிகரும், ஒளிப்பதிவாளருமான நட்டி என்னும் நடராஜ் அண்மையில் ட்விட்டரில், “தமிழ் சினிமாவில் வாரிசு அரசியல் இருக்கிறதா, இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் குழு அரசியல் இருக்கிறது. யாருக்கு என்ன கிடைக்க வேண்டும் என்பதை யாரோ நிர்ணயிக்கிறார்கள். யாரு நீங்க?" என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு ரீட்வீட் செய்திருந்த நடிகர் ஷாந்தனு, “வாரிசு அரசியல் இங்கேயும் உள்ளது. அதே குழு அரசியல் நபர்கள்தான் நம்முடன் யார் வேலை செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள். தரத்தை பராமரிக்க அவர்கள் ஒரு சிலரை ஆதரிக்கிறார்கள், தங்கள் தரத்தை அதிகரிக்க மற்றவர்களை அனுமதிக்க மாட்டார்கள்” என்று ட்விட்டரில் தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
தற்போது 'மாநாடு' படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பாலிவுட்டில் மட்டுமல்ல குழு அரசியல் இங்கும் உள்ளது. நடிகர்களிடம் உள்ளதோ இல்லையோ, ஒருசில தயாரிப்பாளர்களிடம் உள்ளது. அவர்களால்தான் மிகப்பழமையான தயாரிப்பாளர்களும் ஒதுங்கியிருக்கிறார்கள்.
தான் மட்டுமே வாழவேண்டும் என நினைக்கும் அந்த பிரபல தயாரிப்பாளர் தன் பலத்தால் சில பல தயாரிப்பாளர்களை உடன் சேர்ந்துகொண்டு பலரை வாழவிடாமல் கெடுத்துக்கொண்டிருக்கிறார்.
ஹீரோக்களுக்கு போன் பண்ணி கெடுத்துவிடுவதும், ஃபைனான்சியர்களை கலைத்துவிடுவதும், படத்தை பற்றி கேவலமாக கிளப்பிவிட்டு விநியோகஸ்தர்களிடம் பீதியை உருவாக்குவதுமாக முன்னால் விட்டு பின்னால் செய்யும் வேலையை வெற்றிகரமாக செய்துவருகிறார்.
அதற்கு சில தயாரிப்பாளர்கள் உடன்பட்டு நிற்பதுதான் வேதனை. வெகு விரைவில் முகத்திரைகள் கிழியும். அதற்கு நடுவில் பாலிவுட் போல யாரும் தற்கொலை அது இதுன்னு இறங்கிவிடக்கூடாது. குழு அரசியல் விரைவில் ஒழிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.