Skip to main content

'உள்ளம் போதும் ஊரை வெல்ல...' - கண் கலங்கிய ரசிகரை கட்டியணைத்த சிம்பு

Published on 20/04/2023 | Edited on 20/04/2023

 

simbu fans get emotional

 

1984 ஆம் ஆண்டு வெளியான டி.ராஜேந்தர் இயக்கிய 'உறவைக் காத்த கிளி' படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு, தொடர்ந்து பல படங்களில் நடித்தார். பின்பு 'காதல் அழிவதில்லை' படம் மூலம் ஹீரோவாக மாறி தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். நடிப்பை தாண்டி பாடுவது; பாடலுக்கு வரிகள் எழுதுவது; இசையமைப்பது என பன்முகத் திறமை கொண்டவராக இருந்து வருகிறார். 

 

தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வந்த சிம்பு 2012 ஆம் ஆண்டு வெளிவந்த 'போடா போடி' படத்திற்கு பிறகு இரண்டாண்டுகளுக்கு ஹீரோவாக எந்த படமும் நடிக்கவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்தார்கள். அவர்களை ஆறுதல்படுத்தும் விதமாக 'கண்ணா லட்டு திங்க ஆசையா', 'காக்கா முட்டை' உள்ளிட்ட சில படங்களில் கேமியோவாக தலை காண்பித்து சென்றார். 

 

பின்பு 2016 ஆம் ஆண்டில் பழையபடி மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார். அச்சம் என்பது மடமையடா, செக்கச் சிவந்த வானம், மாநாடு உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்து கம்பேக் தந்தார். இதையடுத்து 'பத்து தல' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சிம்புவை பார்க்க ரசிகர்கள் வந்திருந்தனர். அவர்களை குஷிப்படுத்தும் விதமாக பேசிய சிம்பு, "இனி தொடர்ந்து படங்களில் நடிப்பேன். ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம்" எனப் பேசியிருந்தார். 

 

இதனால் அவரது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருந்த நிலையில், அவர்களுக்கு மேலும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக கடந்த 18 ஆம் தேதி சென்னையில் அவர்களை சந்தித்துப் பேசினார். மேலும் அவர்களுக்கு பிரியாணி பரிமாறினார். அப்போது சிம்புவுடன் அவரது ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதில் ஒரு ரசிகர் சிம்புவை அருகில் பார்த்ததும் கண் கலங்கத் தொடங்கிவிட்டார். உடனே சிம்பு அவரை "அழக்கூடாது... இனிமே சிரிக்கணும்னு சொல்லிருக்கேன். ஏன் அழுவுற... அழக்கூடாது" என ஆறுதல்படுத்தி கட்டியணைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

'பத்து தல' படம் கடந்த மாதம் 30 ஆம் தேதி வெளியானது. இப்படத்தை தொடர்ந்து தேசிங் பெரியசாமி இயக்கத்தில் கமல் தயாரிப்பில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்