கார் வீட்டுக்குள் நிற்கிறது, தலையை சுற்றி குருவிகள் பறக்கின்றன, கப்போர்டுக்குப் பின் பாத்ரூம் இருக்கிறது, வீட்டுக்குள்ளே செடி வளர்கிறது, அலுவலகம் கோழிப்பண்ணையாகத் தெரிகிறது, இப்படியே போய்... நாய் மனிதனாகத் தெரிகிறது.
தமிழின் முதல் பேசும் படம், கலர் படம் பார்த்திருப்போம், தமிழின் முதல் சினிமாஸ்கோப் படம் பார்த்திருப்போம், தமிழின் முதல் டிஜிட்டல் படம் பார்த்திருப்போம்... இது தொழில்நுட்ப ரீதியில் தமிழ் திரைப்படங்களின் பரிணாம வளர்ச்சி. அது போல, தமிழின் முதல் சமூகப் படம், காதல் படம், திகில் படம், அடல்ட் ஹாரர் படம்... வரிசையில் இப்போது தமிழின் முதல் ஸ்டோனர் திரைப்படம். ஸ்டோனர் என்றால்? கீரவாநீ, கசகசா, ட்ரிப், டோப்...இந்த வார்த்தைகளெல்லாம் தெரியாத சாமானிய இன்னொசண்ட் தமிழனுக்கு கஞ்சா. ஆம், கஞ்சா பயன்படுத்துபவர்களின் உலகமும் அதில் நடக்கும் நகைச்சுவையும் பிரச்சனைகளும்தான் ஸ்டோனர் திரைப்படங்களின் களம்.
தனக்கென இருந்த ஒரே தாத்தாவும் (பிரேம்ஜி) நிதானமில்லாத நிலையில் தற்கொலை செய்துகொள்ள, தாத்தா விட்டுப்போன சொத்தான கஞ்சாவுடன் தனிமையில் வாழ்கிறார் மகேஷ் (பரத்). தானுண்டு தன் பழக்கம் உண்டு (???!!!) என்று வாழும் மகேஷின் வாழ்க்கையில் திடீரென பக்கத்து வீட்டு மது (பானுஸ்ரீ) வடிவில் வருகிறது காதல். மதுவின் செல்ல முரட்டு நாயான கிரேட் டேன் வகை நாய் சிம்பா. சிம்பா, மகேஷுக்கு மட்டும் மனிதனாகத் தெரிகிறது, பேசுகிறது, பழகுகிறது. அதுவும் தன் தாத்தா (பிரேம்ஜி) உருவத்தில். சிம்பாவை நட்பு கொள்வதன் மூலம் மதுவுடன் நெருக்கமாக முயலும் மகேஷ் தனிமையில் இருந்து மீண்டாரா என்பதுதான் 'சிம்பா'.
ஸ்டோனர்களின் உலகை, பழக்கவழக்கத்தை, வாழ்க்கையை, அவர்களுக்குத் தோன்றும் மாய பிம்பங்களை காட்சிப்படுத்திய விதத்தில் கலவரமாக கவனம் ஈர்க்கிறார் இயக்குனர் அரவிந்த் ஸ்ரீதர். தமிழில் இதுவரை தவிர்க்கப்பட்டு வந்த அல்லது முயற்சி செய்யப்படாத (செய்யப்படவேண்டிய விஷயம் அல்ல) விஷயத்தை படமாக்கி உள்ளார். கற்பனை வளம் சிறப்பு. படத்தைத் தன் செல்ல நாய்க்கு அர்பணித்துள்ளார். படம், ஸ்டோனர் பரத்துக்கும் 'சிம்பா' நாய் பிரேம்ஜிக்கும் இடையில் அசைந்து நகர்கிறது. இவர்கள் தவிர வேறு பாத்திரங்கள், ஹீரோயின் உள்பட, எதுவும் பலமாக அமைக்கப்படவில்லை.
பிரேம்ஜியின் காமெடிகள் ஒவ்வொன்றையும் ரசிக்க வைத்ததிலேயே இயக்குனரின் வெற்றி நிகழ்ந்துவிடுகிறது. கெளதம் மேனன் குரலில் வரும் அறிமுகம், பொங்கும் புகையிலே பாடல், ஒவ்வொரு முறை பரத் மொக்கை போடப் போகும் முன் தோன்றும் மைக், அப்பா அம்மா கதை சொல்லும்போது தோன்றும் அனிமேஷன், நாய்களுக்குள் நடக்கும் பஞ்சாயத்து என படம் முழுவதும் சின்னச் சின்ன ஐடியாக்களும் சின்னச் சின்ன காமெடிகளும்தான் படத்தைக் காப்பாற்றுகின்றன, நம்மையும்தான். சின்ன உலகில் நான்கு பேருக்குள் நகரும் கதை ஒரு கட்டத்துக்கு மேல் நம்மையும் ஒரு மயக்கத்துக்குக் கொண்டு செல்கிறது. போதை, தனித்தனியாக வாழும் மனிதர்கள், நாய்களுக்குள் காதல் - வன்புணர்வு, அதையே நகைச்சுவையாக்குவது என தமிழுக்கு பழக்கப்படாத மனதில் ஒட்டாத விஷயங்கள் படத்தை கொஞ்சம் தள்ளிவைக்கின்றன. ஒரு முழுநீள படத்துக்கான கதையும் காட்சிகளும் இல்லாத குறை இரண்டாம் பாதியில் தெரிகிறது.
பரத்துக்கு லுக்கிலும் நடிப்பிலும் வெகுநாட்களுக்குப் பிறகு ஒரு கருதத்தக்க திரைப்படம். பெரிய வேலையில்லை, போதையில் உழல்பவராக அமைதியாக இருக்கிறார். சிம்பா, டைட்டிலுக்கு ஏற்ப நாயாக நடித்துள்ள பிரேம்ஜிக்கு மாஸ் அறிமுகம், ஃபைட் ஸீன், காதல், காமம் என அத்தனையும் கொண்ட, பெரிய ஸ்கோப் உள்ள திரைப்படம். பிரேம்ஜியும் அதை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார். நாயகி பானுஸ்ரீ வந்து செல்கிறார், பெரிய பாதிப்பில்லை. ரமணா, எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத எதிர்பாரா வில்லன்.
சினு சித்தார்த்தின் ஒளிப்பதிவு, இயக்குனரின் கண்ணாகவும், நாயகன் பரத்தின் கண்ணாகவும் இருந்து படத்தை பதிவு செய்திருக்கிறது. போதையேற்றும் வண்ணமும் கோணங்களும் புதிய அனுபவம். விஷால் சந்திரசேகரின் இசை படத்தின் மிகப்பெரிய பலம். பிஞ்சுல பிஞ்சுல, மறந்ததே பாடல்கள் மயக்குகின்றன. அச்சு விஜயனின் படத்தொகுப்பு சட் சட்டென வெட்டுவதும் ஒட்டுவதுமென கச்சிதமாக நாயகனின் உலகத்தை உணர்வை நமக்குத் தெரிவிக்கிறது. காட்சி ரீதியாக ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு மூன்றும் இணைந்து ஒரு புதிய அனுபவத்தைத் தருகின்றன.
கவர்ச்சியாக வரும் காட்சிகளில், 'ப்ளர்' பண்ணிவிட்டு இந்தப் படத்துக்கு U சான்றிதழ் கொடுத்திருக்கிறது தணிக்கைக் குழு. என்ன மயக்கமோ... கருத்து ரீதியாகப் பார்த்தால், தேவையில்லாத ஒரு படம்தான், கலை ரீதியாகப் பார்த்தால் புதிய அனுபவம். குறும்படமாகவோ, வெப் சிரீஸாகவோ வெற்றி பெறக்கூடிய படம்.