ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது.
12வது ஐபிஎல் சீசன் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், நேற்று மாலை ஹைதராபாத்தில் நடந்த இறுதி போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி. 2013, 2015, 2017 ஆம் ஆண்டு என தொடர்ந்து நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை மும்பை அணி வென்றுள்ளது.
ஹைதராபாத்தில் முதலில் பேட் செய்த மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. 150 ரன்களை இலக்காக வைத்தது. அதனை தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து போராடி தோல்வி அடைந்தது.
மும்பை அணியில் அதிகபட்சமாக போல்லார்டு 41 ரன்களையும், குயின்டன் டி காக் 29 ரன்கள் எடுத்தனர். சென்னை அணியில் அதிகபட்சமாக வாட்சன் 80 ரன்களையும், பிளஸ்சி 26 ரன்களையும் எடுத்தனர். கடைசி பந்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் போராடி தோற்றது சென்னை அணி.
இந்நிலையில் நேற்று நடந்த மேட்ச் குறித்து தமிழ் திரையுலக பிரபலங்கள் ட்வீட் செய்தனர். நடிகர் சித்தார்த்தும் தொடக்கத்திலிருந்தே இந்த வருட ஐபிஎல் முக்கிய மேட்ச்கள் குறித்து ட்வீட் செய்து வந்த நிலையில் நேற்று நடைபெற்ற மேட்ச் பற்றியும் பேசியுள்ளார். அதில், “என்ன ஒரு ஃபைனல். நன்றாக ஆடினீர்கள் மும்பை இந்தியன்ஸ். எந்த ஒரு ஃபைனலும் இந்த அளவுக்கு நூலிழையில் சென்றிருக்காது. இந்த மேட்ச் எப்படி மாறியது என்பது இன்னும் மர்மமாகவே இருக்கிறது. ஒரே அணியிடம் 4 முறை தோற்பது என்பது கீழ்படிதலின் சிறந்த சாட்சி” என்று தெரிவித்துள்ளார்.