தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று உச்சத்திலிருந்த காலகட்டத்தில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஜவஹர் வித்யாலயா கல்லூரியில் கரோனா நோயாளிகளுக்கு இலவசமாகச் சிகிச்சை அளித்துவந்தவர் சித்த மருத்துவர் வீரபாபு. இவர், ஓர் உயிரிழப்புகூட இல்லாமல் தற்போதுவரை 5000க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகளைக் குணப்படுத்தியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகரான இவர், கடந்த ஆண்டின் இறுதியில் உழைப்பாளி என்ற பெயரில் ஒரு மருத்துவமனை தொடங்கி பத்து ரூபாய் கட்டணத்தில் மருத்துவச் சிகிச்சை அளித்து வருகிறார்.
இந்த நிலையில், தற்போது முடக்கறுத்தான் என்ற படத்தை வீரபாபு இயக்கி நடித்துள்ளார். கதாநாயகியாக மஹானா நடித்துள்ளார். இப்படத்தை வயல் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. வீரபாபு, மஹானா உள்ளிட்ட படக்குழுவினரும் சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் பேசிய வீரபாபு, "சிறு வயதிலிருந்தே சினிமா மீது எனக்கு ஆர்வம் அதிகம். இந்தத் துறையிலும் சாதிக்க வேண்டும் என்று நினைத்தேன். தற்போது அது நிஜமாகி உள்ளது. குழந்தைகளின் வாழ்க்கையை முடக்கும் கயவர்கள் பற்றிய கதைதான் முடக்கறுத்தான். நிறையக் குழந்தைகள் பல்வேறு சூழ்நிலை காரணமாகச் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான ஓர் அமைப்பு மற்றும் திட்டம் உருவாக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. குழந்தைகளுக்கான பல பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன. அது இன்னும் தீவிரமாகச் செயல்பட வேண்டும். இந்த படத்தை ஒரு பார்வையாளனாகப் பார்த்துச் சொல்கிறேன் இந்த படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி அடையும்" எனக் கூறினார்.