Skip to main content

“மரண தண்டனை காலத்தின் தேவை” - சிபி சத்யராஜ்

Published on 30/12/2024 | Edited on 30/12/2024
sibi sathyaraj condemn anna university issue

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் போலீசாரின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரித்த நிலையில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், அண்ணாநகர் துணை ஆணையர் சினேக பிரியா, ஆவடி துணை ஆணையர் இமான் ஜமால், சேலம் துணை ஆணையர் பிருந்தா அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது.

இதற்கிடையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து  தமிழகம் முழுவதும் எதிர்கட்சிகள், கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.  மேலும் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திரைப்பிரபலங்களில் ஜீ.வி.பிரகாஷ் மாணவர்களின் போராட்டத்துக்கு உறுதுணையாக இருப்பதாக தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் சத்யராஜின் மகனும் நடிகருமான சிபி சத்யராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், “மீண்டும் குற்றம் செய்பவர் என்ற சொல் சமுதாயத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தும். அது அகராதியிலிருந்து ஒழிக்கப்பட வேண்டும். அதற்கு உச்சபட்சமான மரண தண்டனையை கொடுக்க வேண்டும். அது காலத்தின் தேவையாக இருக்கிறது. மேலும் பெற்றோர் மற்றும் குழந்தைகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இவர்களுக்கிடையே நட்பு ரீதியான தொடர்பு இருந்து வருகிறது. குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டவர்கள் பயமுறுத்தப்படாமல் இருக்க வேண்டும். கூடிய விரைவில் நீதி கிடைக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்